தேனி மாவட்ட அ.தி.மு.க.வினர் சசிகலாவைக் கட்சியில் சேர்க்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கினர். அத்துடன், சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர். இது அ.தி.மு.க.வினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என ஆதரவு, எதிர்ப்புக் குரல் எழுந்தது.
இதன் காரணமாக, தேனி மாவட்டம், பெரிய குளத்தில் நாளை (05/03/2022) நடைபெற இருந்த அ.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தையும் ரத்து செய்து விட்டார். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சென்றுள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, இன்று (04/03/2022) மாலை 07.00 மணிக்கு சசிகலா தங்கியுள்ள விடுதியில் அவரை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.