Skip to main content

மாவட்ட செயலாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு; விஜய் காரை மறித்த த.வெ.க.வினர்!

Published on 13/03/2025 | Edited on 13/03/2025

 

Opposition to the appointment of the Dt Secretary Tvk members blocked Vijay's car

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் அக்கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து, பரந்தூரில் புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களை அண்மையில் சந்தித்திருந்தார். அதோடு அக்கட்சி கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி (02.02.2025) 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இந்த தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் விஜய் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

இதனையடுத்து, த.வெ.க.வின் கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தார். மேலும் பிரபல அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உடன் விஜய் சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக த.வெ.க.வின் 2ஆம் ஆண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த 26ஆம் தேதி (26.02.2025) நடைபெற்றது. இதற்கிடையே கட்சிக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்தார். அதாவது அக்கட்சியின் சார்பில் 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.

அதில் 98 மாவட்டங்களுக்கு இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். மீதமுள்ள 22 மாவட்டத்திற்கான செயலாளர்கள் இன்று (13.03.2025) நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் 16 பேர் இன்று நியமிக்கப்பட்டனர். மற்ற 6 பேரின் நியமனம் நிர்வாகக் காரணங்களுக்காக தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ஆர்.கே. மணி என்பவரை மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுவதற்கு அக்கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்களில் ஒருவரையே மாவட்ட செயலாளரையே நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் அக்கட்சியின் தலைவர் விஜய் நீலாங்கரையில் இருந்து பனையூர் சென்று கொண்டிருந்தார். அப்போது காரிலும், இரு சக்கர வாகனத்திலும் வந்த த.வெ.க.வினர் விஜய்யின் காரை வழிமறித்து இது தொடர்பாக மனு கொடுக்க முயற்சி செய்தனர். இதனையடுத்து விஜய்யின் கார் ஓட்டுநர் மனுவை அக்கட்சியினரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

சார்ந்த செய்திகள்