நிவர் புயல் கரையை நெருங்கும் நிலையில், மக்களை முன்னெச்சரிக்கையாக மீட்கும் பொருட்டு, நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி இரண்டு நாட்களாக தொகுதி முழுக்கச் சுற்றி வருகிறார்.
திருமருகல் ஒன்றியம் மற்றும் திட்டச்சேரி பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தவர், தொடர்ந்து நாகை ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் செய்து முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறார். மக்கள் தங்குவதற்கு, திருமண மண்டபங்கள், பள்ளிக் கூடங்களை ஏற்பாடு செய்ததோடு, ஒவ்வொரு ஊராட்சியிலும் மரம் அறுக்கும் இயந்திரம், பொக்லைன் இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் இருக்குமாறு வி.ஏ.ஒ மற்றும் ஊராட்சி செயலாளர்களைக் கேட்டுக் கொண்டது கிராமப்புற மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
நாகை, நாகூர் நகராட்சிப் பகுதிகளில் சாக்கடை தூர்வாரல், மின் கம்பங்களைச் சீரமைத்தல் போன்ற பணிகளைத் தீவிரப்படுத்தி, நகராட்சி ஆணையரிடம் இப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து, மேல் நடவடிக்கைகளுக்கு உடனுக்குடன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆங்காங்கே ரேஷன் கடைகளுக்கும் விசிட் செய்து பொருட்களின் வினியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அங்கு நின்ற மக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்துள்ளார். பிறகு கடலோர மீனவ கிராமங்களுக்குச் சென்று, அவர்களின் நிலைகளைக் கேட்டறிந்து, படகுகளைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திட அறிவுறுத்தியது மீனவர்களை நெகிழச் செய்துள்ளது.