தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வுக்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகையச் சூழலில் குரூப் - 4 தேர்வானது ஜூன் 9 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி - IV) இல் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கொள்குறி வகை (OMR முறை) தேர்வு ஜூன் 9 ஆம் தேதி (09.06.2024) முற்பகல் நடைபெற உள்ளது.
எனவே இந்தத் தேர்வை எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.