மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியைச் சேர்ந்த வேந்தாந்த் அகர்வால் என்ற 17 வயது சிறுவன், கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது நண்பர்களுடன், தனியார் ஹோட்டலில் மது அருந்திவிட்டு தனது தந்தையின் சொகுசு வாகனத்தில் அதிவேகமாக வந்து முன்னே சென்ற பைக் மீது மோதினார். இந்த கோர விபத்தில், பைக்கில் பயணித்த ஐ.டி ஊழியர்களான அனுஷ் மற்றும் கோஷ்டா ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், விபத்தை ஏற்படுத்திய சிறுவன் வேந்தாந்த் அகர்வாலைப் பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வேந்தாந்த் அகர்வாலைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட வேந்தாந்த் அகர்வாலைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பீட்சா, பிரியாணி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 20ஆம் தேதி சிறார் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வேதாந்த் அகர்வால் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை விசாரித்த நீதிமன்றம், அவருக்குச் சம்பவம் நடந்த 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியது. விபத்தை ஏற்படுத்தி ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு, சிறுவனுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது கடும் விமர்சனங்கள் எழுந்தது.
தொடர் விமர்சனங்களின் விளைவாக, அந்தச் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் சிறுவனின் தந்தையும் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான விஷால் அகர்வாலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, சிறுவன் வேந்தாந்த் அகர்வாலுக்கு மது வழங்கியதற்காக ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மேலாளர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குடும்ப கார் ஓட்டுநரான கங்காராமை மிரட்டி, கார் விபத்து பழியை ஏற்குமாறு வற்புறுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், சிறுவன் வேந்தாந்த் அகர்வாலின் தாத்தா சுரேந்திரா அகர்வாலை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், சிறுவனை காப்பாற்ற அவனது ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றி கொடுக்க தொழிலதிபர் குடும்பம் தங்களது பணபலத்தை பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பான விசாரணையில், சிறுவன் மது அருந்தியதை உறுதி செய்ய புனேவில் உள்ள அரசு மருத்துவமனையான சசூன் மருத்துவமனைக்கு சிறுவன் ரத்த பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். ஆனால், அந்த அறிக்கையில், சிறுவன் மது அருந்தவில்லை என அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளியானது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனை காப்பாற்ற அவனது குடும்பம், தங்களது பணபலத்தை பயன்படுத்தி, தடயவியல் மருத்துவர்களான அஜய் தவாடே மற்றும் ஹரி ஹர்னூர் ஆகியோரிடம் அறிக்கையை மாற்றி கொடுக்கும்படி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில், அறிக்கையை மாற்றி கொடுத்து மோசடி செய்த இரண்டு மருத்துவர்களையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.