Skip to main content

ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு!

Published on 26/05/2024 | Edited on 26/05/2024
Attention those who wrote the exam for the teaching job

பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2023 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் 3 ஆயிரத்து 192 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி (25.10.2023) வெளியிடப்பட்டது. அதில் விண்ணப்பதாரர்கள் 13.12.2023 வரை தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் 41 ஆயிரத்து 485 பேர் ஆவர். அதனைத் தொடர்ந்து போட்டித் தேர்வு 04.02.2024 அன்று ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் (OMR - Optical Mark Reader) வழியில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.

மொத்தமாக தேர்வு எழுதியவர்கள் 40 ஆயிரத்து 136 பேர். இதற்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 18.05.2024 மற்றும் 22.05.2024 அன்று வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு அழைப்புப் கடிதம், ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுய விவரப்படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தங்களது அழைப்புக் கடிதம், ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுயவிவரப்படிவம் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என பணிநாடுநர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

அதே சமயம் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு சார்ந்த கோரிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான trbgrievances@tn.gov.in அல்லது 18004256753 என்ற கட்டணமில்லாத தொலைபேசி வழியாக தெரிவிக்கலாம். பிற வழி கோரிக்கைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்றுக் கொள்ளப்படாது எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 2023 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணித்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து அனைத்து விவரங்களும் வெளிப்படையாக இமணயதளத்தின் வழியாகவும், செந்ய்திக் குறிப்பின் வாயிலாகவும் தெரிவிக்கப்படும் எனப் பணிநாடுநர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

சார்ந்த செய்திகள்