Skip to main content

“பெரியார் பல்கலை. ஊழல் விசாரணைக் குழு கால நீட்டிப்பு தேவையற்றது...” - ராமதாஸ் 

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

“Periyar University. Corruption inquiry committee extension unnecessary..” - Ramadoss

 

“பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் பற்றி விசாரணைக்கு அரசு ஆணையிட்டது மிகச்சிறந்த முன்னெடுப்பு ஆகும். அது அதன் இயல்பான முடிவை அடைய வேண்டும் என்றால் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும். அதற்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள  இப்போதைய பொறுப்பு பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள் உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசுக்கு அறைகூவல் விடும் வகையில் பெரியார் பல்கலைக் கழகத்தில் முறைகேடுகள் தொடரும் நிலையில், விசாரணை மிக மிக வேகம் குறைவாக நடைபெற்று வருவதால், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பி விடுவார்களோ என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது.

 

சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது பட்டியலிடப்பட்ட 13 குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் சு.பழனிச்சாமி, இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி 2 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்று கடந்த ஜனவரி 9-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில்  தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஜனவரி 30, மார்ச் 6 ஆகிய நாட்களில் இரு உறுப்பினர்கள் குழு பல்கலைக்கழகத்திற்கு சென்று முதன்மையான கோப்புகளை கைப்பற்றியதுடன், விசாரணையையும் நடத்தியது. அடுத்த சில நாட்களில் நடைபெறவிருந்த சாட்சிகள் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

 

இரு உறுப்பினர் குழுவின் பதவிக்காலம் மார்ச் 12-ஆம் நாளுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், அதுவரை நடந்த விசாரணையின்படி குழு அதன் அறிக்கையை அரசிடம் வழங்கும்; அதன் அடிப்படையில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  விசாரணைக்குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பது அந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் தகர்த்துள்ளது.

 

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்கள் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது. ஆனால், பல்கலைக்கழக நிர்வாகமோ, அரசுக்கே அறைகூவல் விடுக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு வெகுமதி வழங்கும் செயல்களிலும், ஊழலுக்கான சான்றுகளை அழிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்ததற்காக 5 மாணவிகளின் நடத்தைச் சான்றிதழில் மோசம் என்று நிர்வாகம் குறிப்பிட்டது. அதற்கு எதிராக நான் குரல் கொடுத்தேன்; மாணவிகள் போராட்டம் நடத்தினர். அதன்பிறகே கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தைச் சான்றிதழ் திருத்தி வழங்கப்பட்டது.

 

போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த, திறமையற்ற தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி, ஆட்சிக்குழு உறுப்பினராக அமர்த்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட்டிருக்கிறது. ஆனால், அதே பெரியசாமி சாகித்ய அகாதமி குழுவில் தமிழ்நாட்டிலிருந்து பல்கலைக்கழக பேராளராக அமர்த்தப்பட்டிருக்கிறார். இது கண்டிப்பாக தமிழ்நாடு அரசுக்கு அறைகூவல் விடுக்கும் செயல் தான்.

 

அடுத்தக்கட்டமாக, பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்ததாக தமிழக அரசால் பட்டியலிடப்பட்ட 13  குற்றச்சாட்டுகளில் எட்டாவதாக இடம் பெற்றுள்ள மென்பொருள் கொள்முதல் ஊழலில் தொடர்புடைய கணினி அறிவியல் துறையின் தலைவர் தங்கவேல் என்பவரை பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக துணைவேந்தர் அமர்த்தியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரையே, அது குறித்த விசாரணையை ஒருங்கிணைக்கும் பதிவாளராக அமர்த்துவது எந்த வகையில் நீதி? இது பெரியார் பல்கலைக்கழக ஊழல் குறித்த விசாரணையை முற்றிலுமாக முடக்குவதற்கே வழிவகுக்கும்.

 

பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள தங்கவேல் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவரது அடிப்படைக்கல்வித் தகுதி குறித்து வினா எழுப்பிய தணிக்கைத் துறை அவரது பணியமர்த்தலுக்கு தடை விதித்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பணியிடம் கடந்த 5 ஆண்டுகளாக  காலியாகவே உள்ளது. அதில் நான்கரை ஆண்டுகள் பதிவாளர் பணியை தங்கவேலுவே கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்திருக்கிறார். அதற்காக விதிகளை மீறி ஏறக்குறைய 22 லட்சம் ரூபாயை மதிப்பூதியமாக பெற்றிருக்கிறார். அடுத்த 6 மாதங்களில் இருவரிடம் பதிவாளர் பணி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு, உடனடியாக பறிக்கப்பட்டு மீண்டும் தங்கவேலுவிடம் வழங்கப்பட்டுள்ளது. இது அநீதி.

 

முழுநேர பதிவாளரின் பதவிக்காலமே 3 ஆண்டுகள் மட்டும் தான். ஆனால், தங்கவேல் பொறுப்பு பதிவாளராகவே நான்கரை ஆண்டுகள் இருந்திருக்கிறார். ஆறு மாத இடைவெளியில் மீண்டும் அதே பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கிறார். பெரியார் பல்கலைக்கழகத்தில் தங்கவேலுவை விட அனுபவமும்,  கல்வித்தகுதியும் கொண்ட மூத்த பேராசிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை தவிர்த்துவிட்டு, தங்கவேலு பொறுப்பு பதிவாளராக அமர்த்தப்பட்டிருப்பதன் நோக்கம் ஊழல்கள் குறித்த விசாரணையை முடக்குவது தான் என்று பல்கலைக்கழக ஊழியர்கள் கூறுகின்றனர். அதை புறக்கணித்துவிட முடியாது.

 

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் பற்றி விசாரணைக்கு அரசு ஆணையிட்டது மிகச்சிறந்த முன்னெடுப்பு ஆகும். அது அதன் இயல்பான முடிவை அடைய வேண்டும்  என்றால் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும். அதற்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள  இப்போதைய பொறுப்பு பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். விசாரணைக்குழு  புதிய காலக்கெடு வரை காத்திருக்காமல்,  ஏப்ரல் 12ஆம் நாளுக்குள் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை வழங்குவதையும், அதன் அடிப்படையில் குற்றவாளிகள்  மீது  உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்