இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, 486 தொகுதிகளில் ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து, மீதமுள்ள 58 தொகுதிகளில் இறுதிக்கட்டமாக வரும் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடைசி கட்டத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தேர்தல் வியூக கணிப்பாளரான பிரசாந்த் கிஷோர், நடப்பு தேர்தலில் ஆட்சி அமைக்கும் கட்சி யார் என்பதை பற்றி சில விவரங்களை சமீபத்தில் கூறினார். அதில், மக்களவைத் தேர்தலில் 303 இடங்கள் அல்லது இன்னும் கொஞ்சம் கூடுதலான இடங்களை பா.ஜ.க வெற்றி பெற முடியும் என்றும் பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராவார் என்று சில நாட்களுக்கு முன் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டார். மேலும் அவர் கூறுகையில், வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் 205 இடங்கள் கைப்பற்றும் எனவும், கிழக்கு மற்றும் தெற்கில் 50 இடங்களை கைப்பற்றும் எனவும் கூறினார்.
இந்த நிலையில், நடப்பு தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளைக் கைப்பற்றும்? என்ற கேள்விக்கு பிரசாந்த் கிஷோர் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் மூன்று இலக்க இடங்களை பெற மாட்டார்கள். காங்கிரஸுக்கு 100 வரும் என்று நான் எண்ணவில்லை. ஏனென்றால் காங்கிரஸ் 100 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பா.ஜ.க 300 இடங்களை வெற்றி பெறாது. இது ஒரு பொது அறிவு. காங்கிரஸால் மூன்று இலக்க எண்ணிக்கையை பெற முடியாது. நான் யாருக்கும் ஆதரவாக அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை. யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை நான் விரிவாகப் பார்க்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.