![muthoot finance branch thief police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/hhdkjq6JZ4y57pZ1kInRqPsv4kuQyIinGjsrIYtNztM/1611300713/sites/default/files/inline-images/muthoot-finance%20%281%29.jpg)
முத்தூட் பைனான்ஸில் (Muthoot Finance) ரூபாய் 7 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள முத்தூர் பைனான்ஸ் கிளையில் நுழைந்த ஹெல்மெட், முகமூடி அணிந்த ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பல், பைனான்ஸ் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி சாவியைப் பெற்று, சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான 25,091 கிராம் தங்க நகைகள், ரூபாய் 96,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கொள்ளையர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவதால், தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளதாகவும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.