தொடர்ந்து தலைநகர் சென்னை உட்பட சில மாவட்டங்களில் எண்ணிக்கையை அதிகரித்து கோரதாண்டவம் ஆடுகிறது கொடிய கரோனா வைரஸ். மார்ச் மூன்றாம் வார தொடக்கத்தில் தமிழகத்தில் நுழைந்த இந்த கரோனா, இப்போது ஐம்பது நாட்களை கடக்கிறது. இந்த கொடிய வைரஸ் மனித சமூகத்தின் மீது பாய்ந்து விட்டது என அறிந்த மத்திய அரசால் முக்கிய நகரமாக அறிவிக்கப்பட்டது ஈரோடு மாவட்டம்.
இங்கு வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து 70 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து இது யாருக்கும் பரவாமல் இருக்கும் வகையில் ஈரோடு மாவட்ட நிர்வாகம் திறமையான களப்பணியை ஆற்றியது. மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், ஈரோடு மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் சவுண்டம்மாள் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆகிய அதிகாரிகள் நேரடியாக களம் இறங்கினார்கள்.
காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் என எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு பகுதியாக இந்த வைரஸ் தொற்று நோய் மேலும் பரவாமல் இருக்க தொடர்ந்து ஆய்வுப் பணிகளும், தடுப்பு பணிகளும் செய்து வந்தனர். அதன் பயனாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட 70 பேரில் ஒருவர் மட்டும் இறந்துவிட, மற்ற 69 பேரும் குழு குழுவாக சிகிச்சை பெற்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இறுதியாக சென்ற 28-ஆம் தேதி சிகிச்சையில் இருந்த நான்கு பேரும் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு ஈரோடு மாவட்டம் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது.
மேலும் தொடர்ந்து இங்கு வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அதிகாரிகளும், பணியாளர்களும் நடத்திய உழைப்பு பயன் கொடுத்து. இன்றுடன் 21 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் யாரும் வைரஸ் தொற்று பரவிய நபர்கள் இல்லை என்பதால் ஈரோடு மாவட்டம் இன்று முதல் ஆரஞ்ச் மண்டலத்திலிருந்து பசுமை மண்டலத்திற்கு மாறியுள்ளது. இதன் மூலம் ஈரோடு மாவட்டம் கரோனா வைரஸ் தொற்று முழுமையாக இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், பாதுகாப்பு கவசங்கள் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பையும் தொடர்ந்து காவல்துறையினரும், மருத்துவத் துறையினரும் செய்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்ட அதிகாரிகள், பணியாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த உழைப்பு ஈரோட்டில் கரோனா வைரஸ் அறவே இல்லை என்ற மகிழ்ச்சியான செய்தியை, பசுமை மண்டலமாக மாறி அறிவித்துள்ளது.தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.