/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anna4_0.jpg)
கல்லூரி மழை நீரால் மிதந்ததைக் கண்டு கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ரூபாய் 4 லட்சம் நிதி திரட்டி கல்லூரி வளாகத்தில் ஒருங்கிணைந்த மழைநீர் சேகரிப்பு விவசாய பண்ணைத் திட்டம் உருவாக்கியுள்ளது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சிதம்பரம் நகரத்தையொட்டியுள்ள அண்ணாமலை நகரில் அரசு முத்தையா தொழில் நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள இந்த கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் உலகளவிலும் பல்வேறு மாநிலங்களிலும், தமிழகத்திலும் அரசு மற்றும் தனியார்த்துறை பணிகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள். இந்நிலையில் உள்ள கல்லூரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் கல்லூரி மற்றும் வளாகம் முழுவதும் மழைநீர் முழங்கால் அளவிற்குத்தேங்கி இருந்தது. இதனை உள்ளூரில் வசிக்கும் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் பார்த்து கண் கலங்கி வேதனை அடைந்து கல்லூரியின் நிலைமைக் குறித்து சக மாணவர்களுக்கு சமூகவலைத்தளம் மூலம் பதிவு செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anna1 (1).jpg)
இதனைத்தொடர்ந்து கல்லூரியில் பயின்ற முன்னாள் கட்டிடவியல்துறை மாணவர்கள் ஒருங்கிணைந்து கல்லூரி வளாகத்தில் நிரந்தரமாகத்தண்ணீர் தேங்காமல் இருக்கத்திட்டங்களைத்தீட்டினர். இதற்குக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர் அழகரசன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு மாணவர்கள் மத்தியில் ரூபாய் 4.2 லட்சம் நிதியைப் பெற்று, இதற்காகத்தனிக்குழுவைக் கொண்டு கல்லூரி மற்றும் வளாகத்தில் உள்ள மழைநீர் வடிகாலைத்தூர் வாரினார்கள். பின்னர் கல்லூரி வளாகத்தில் மழைநீர் தேங்கும் வகையில் பெரிய குளத்தை வெட்டி குளத்தைச் சுற்றி 500- க்கும் மேற்பட்ட தென்னை, ஆலமரம்,மா,பலா,கொய்யா,வேம்பு உள்ளிட்ட மரங்களை நட்டுவைத்து ஒருங்கிணைந்த மழைநீர் சேகரிப்பு விவசாய பண்ணைத்திட்டம் உருவாக்கியுள்ளனர்.
குளத்தில் எப்போதும் 2 அடி அளவிற்குத்தண்ணீர் தேங்கிநிற்கும் அதற்கு மேல் தண்ணீர் வந்தால் வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. குளத்தின் வளாகத்தில் கல்லூரி விடுதிக்குத்தேவையான காய்கறி உற்பத்தி, மஞ்சள்,கீரை வகைகளை ஊடுபயிராகப் பயிரிடுதல், மாணவர்களுக்குப் பண்ணை கல்வி கற்பித்தல், தழை உரம் தயாரித்தல், நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, குளத்தில் மீன் வளர்த்தல், மாணவர்களுக்கு நிலஅளவை களப்பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் ஒருங்கிணைந்த விவசாய பண்ணை திட்டங்களாக இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anna322.jpg)
இதனைப் புதன்கிழமை (செப் 15) மாலை பொறியாளர் தினத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர் சீனிவாசன் கலந்துகொண்டு பயன்பாட்டுக்குத்திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார். தானாக முன்வந்து கல்லூரி வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்கி சிறப்பாக பணியாற்றிய கல்லூரியின் முன்னாள் கட்டிடவியல் மாணவர்களுக்குச் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டுகளைத்தெரிவித்தார். இவருடன் முத்தையா அரசு தொழிற்நுட்ப கல்லூரியின் முதல்வர் தனவிஜயன், துணைமுதல்வர் மோகன் உள்ளிட்ட கல்லூரியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் கல்லூரியை மறந்துவிடாமல் கல்லூரியின் வளர்ச்சிக்கு கை கொடுத்த சம்பவம் அனைவர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி கவனத்தையும் ஈர்த்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)