கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு (72) காலமானார்.
அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமைச்சர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் துரைக்கண்ணுவின் அரசியல் பயணம்!
தஞ்சாவூர் மாவட்டம், ராஜகிரியில் 1948- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28- ஆம் தேதி பிறந்தவர் அமைச்சர் துரைக்கண்ணு. தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ.படித்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கூட்டுறவு சங்கத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்பு எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது அ.தி.மு.க.வில் இணைந்தார். பாபநாசம் ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட வேளாண் விற்பனை தலைவராகவும் துரைக்கண்ணு இருந்துள்ளார். பாபநாசம் சட்டமன்ற தொகுதியிலிருந்து 2006,2011,2016 இல் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016- ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் வேளாண்துறை அமைச்சரானார்.
தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக உள்ள அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு பானுமதி என்ற மனைவியும் 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் சிவபாண்டியன் வேளாண்மைத் துறையில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் செயலாளராக உள்ளார்.