மயிலாடுதுறை காவல்துறையில் உள்ள சில போலீசார்கள் தனியாக செல்லும் பெண்களிடமும், குடும்ப பெண்களிடமும் சில்மிஷ வேலையில் ஈடுபடுவதோடு, தட்டிக்கேட்கும் உறவினர்களை அடித்து துவைப்பதையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
நாகைமாவட்டம் மயிலாடுதுறை கலைஞர் நகரில் வசித்து வருபவர் ராஜசேகர். மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினராகவும், தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தின் துணைத்தலைவராகவும் இருக்கிறார். கடந்த 7 ம்தேதி அன்று மயிலாடுதுறையிலுள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க குடும்பத்தோடு சென்றுள்ளார். அங்கு காவலில் இருந்த காவலர் வினோத் ராஜசேகரின் மனைவியை பின்பக்கமாக தள்ளியுள்ளார். இதைப்பார்த்த அவர் ஏன்? பெண்கள் மீது கை வைக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த காவலர் வினோத் ஆபாசமாக பேசி ராஜசேகரை லத்தியால் காட்டுமிராண்டித்தனமாக அடித்து உதைத்திருக்கிறார். இதில் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த ராஜசேகர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயிலாடுதுறை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இதனைக் கண்டித்து கண்டனம் ஆர்பாட்டம் நடந்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் மேகநாதன் கூறுகையில்,
’காவலர் வினோத் என்பவர் தொடர்ந்து இதுப்போன்ற சில்மிஷவேலையில் ஈடுபடுவதோடு தட்டிக்கேட்பவர்களை காட்டுமிராண்டி தாக்கும் போக்கையே கடைபிடித்துவருகிறார். அப்பாவி மக்களை மிரட்டுவது, தாக்குவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை சக காவல்துறை கண்டுக்கொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. கடந்த 6 ம் தேதி கோமதி தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற ஆனந்த் என்பவரை இதே காவலர் வினோத்தும் மற்றுமொரு காவலரும் இணைந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.