
வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி, பந்தலூர் (நீலகிரி)- 11 செ.மீ., சின்னக்கல்லார் (கோவை), மைலாடி, ஹாரிசன் எஸ்டேட் பகுதியில் தலா 9 செ.மீ., வால்பாறை (கோவை)- 8 செ.மீ., பரம்பிக்குளம் (கோவை)- 6 செ.மீ., மேல்பவானி (நீலகிரி)- 6 செ.மீ., பெரியாறு (தேனி)- 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, மத்திய மேற்கு வங்கக்கடல், மகாராஷ்டிரா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.