அமைச்சர் எம்.சி.சம்பத் பற்றி பொய்யான தகவல் பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வாட்ஸ்-ஆப் குழு அட்மின் உள்ளிட்ட இருவருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த மேல்குமாரமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம், ‘மேல்குமாரமங்கலம்’ என்ற பெயரில் வாட்ஸ்-ஆப் குழு நடத்தி வருகிறார். இந்தக் குழுவில், ஊராட்சி ஒன்றிய தலைவரான மஹாலட்சுமியின் கணவர் பாலாஜி உறுப்பினராக உள்ளார்.
அந்த வாட்ஸ்-ஆப் குழுவில், ‘கரோனா சமயத்தில் மாயமான தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்’ எனத் தலைப்பிட்டு அவருடைய புகைப்படத்துடன் சில தகவல் பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அதிமுக தொண்டர் ரஜினி என்பவர் ஏப்ரல் 2-ல் அளித்த புகாரில், மாவட்டம் முழுவதும் நிவாரணப் பொருட்கள் வழங்கியும், கரோனா ஒழிப்பு பணிகளை மேற்பார்வையிட்டும், அமைச்சர் எம்.சி.சம்பத் ஈடுபட்டுவரும் நிலையில், அமைச்சர் மாயம் எனத் தவறான தகவல் பரப்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், ஆறுமுகம் மற்றும் பாலாஜி மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறையினர் தங்களைக் கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இருவரும் அமைச்சர் குறித்து கட்டுக்கதைகளைப் பரப்புவதால், காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.