நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரத்தை சேர்ந்த உமா என்ற பெண் காதலிப்பதாக கூறி இளைஞரிடம் நகை பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜாமங்கலத்தைச் சேர்ந்தவர் பொறியாளராக இருந்த சோதிரி ராஜா. இவருக்கும் நாகர்கோவிலில் உள்ள கார் விற்பனை நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்த உமா என்ற பெண்ணுக்கும் பணியிடத்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.
இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் காதல் மயக்கத்தில் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். உமா தனது குடும்ப வறுமை நிலையை சோதிரி ராஜாவிடம் சொல்ல ஒரு கட்டத்தில் உமாவைத்தான் தான் மணக்கப் போகிறோம் என்ற மனநிலையில் இருந்த சோதிரி ராஜா உமாவின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை தன் சம்பளத்தில் இருந்து கொடுத்துள்ளார்.
அதேபோல் சிலமாதங்களுக்கு முன்னர் அவருக்கு நான்கு சவரனில் தங்க வளையல்களையும் பரிசாக அளித்துள்ளார். இப்படி சென்று கொண்டிருந்த இவர்களது உறவில் திடீரென முறிவு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு மொபைல் எண்ணை மாற்றிவிட்ட உமா இவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். உமாவின் அழகில் மயங்கிய சோதிரி ராஜா அதன்பின் அவரை தொடர்பு கொண்டபோது ஜாதி பிரச்சனைகள் இருப்பதால் வீட்டில் நம் காதல் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மறுத்து விட்டனர் எனக் கூறியுள்ளார்.
இதுவரை உமாவின் வங்கி கணக்கில் 10 லட்சம் ரூபாய் வரை போட்டிருந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் சோதரி ராஜாவுடன் பேசுவதை முற்றிலும் நிறுத்தியுள்ளார் உமா.
பின்னர் சில நாட்கள் கழித்து நெல்லையில் ஒரு ஹோட்டலில் நடந்த திருமண வரவேற்பு விழாவிற்கு சென்றபோது சோதிரி ராஜா தனது காதலி வேறு ஒருவருடன் ஜோடியாக இருப்பதைக் கண்டு மிகவும் வருந்தி கண்கலங்கினார். அதன்பின் உமாவிடம் சென்று தான் கொடுத்த 10 லட்சம் ரூபாய் பணத்தையும், தங்க வளையல்களையும் திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் கண்டிப்பாக கொடுத்து விடுகிறேன் என உமா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதன்பிறகு செல்போன் நம்பரை மாற்றிய உமா சோதிரி ராஜாவின் அழைப்புகளை எடுக்க மறுத்துள்ளார். மேலும் உமா பரமசிவம் என்ற வேறொரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டது சோதிரி ராஜாவுக்கு தெரியவந்தது.
இதுபற்றி சோதரி ராஜா காதல் கணவர் பரமசிவம் என்பவரிடம் நேரில் சென்று நியாயம் கேட்டுள்ளனர். ஆனால் உமாவின் கணவன் பரமசிவனோ சோதிரி ராஜாவை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வள்ளியூர் காவல் நிலையத்தில் தனது வங்கிக் கணக்கு, நகைக்கடை ரசீது என ஆதாரங்களுடன் முறையாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இந்த வழக்கை விசாரித்த போலீசார் காதல் என்ற ஒற்றை வார்த்தையில் ஏமாற்றிய உமாவை கைது செய்தனர். அதேபோல் கொலை மிரட்டல் விட்ட உமாவின் கணவர் பரமசிவத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.