பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடத்த திட்டமிட்டிருந்த ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வரும் ஜூன் 30-ஆம் தேதி ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகளை நடத்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் திட்டத்திற்கான அனுமதி மறுத்திருப்பதாக காவல்துறை பதில் மனு அனுப்பியிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.
தமிழகத்தின் கனிம வளங்களை சூறையாடும் நோக்கத்தோடு காவிரி டெல்டாவில் நுழையவிருக்கும் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி மக்களும், அரசியல்கட்சிகளும் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். அதைபோலவே நாசகாரத் திட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் ஜூன் 30-ஆம் தேதி கும்பகோணத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டு ஒருங்கிணைப்பாளர் குடந்தை அரசன், அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு கொடுத்திருந்தார்.
இந்நிலையில் கும்பகோணம் மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் மணிவேல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான மாநாட்டை கும்பகோணத்தில் நடத்தினால் சட்டம் ஒழுங்க்குக்கு பிரச்சனை ஏற்படும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுவிடும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு பிரச்சினையாகிவிடும், மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலரும் மத்திய மாநில அரசுகளை தாக்கிப் பேசுவார்கள், அது வன்முறையாகிவிடும் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி அனுமதியை மறுக்கப்படுகிறது என கடிதம் மூலம் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் குடந்தை அரசனிடம் கேட்டோம், " காவிரி டெல்டா மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மாநாட்டை நாங்கள் நடத்த திட்டமிட்டோம். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்கிறது காவல்துறை, நாங்கள் நீதிமன்றம் மூலம் சட்டப்படி அனுமதி பெற்று மாநாட்டை நடத்துவோம், நிச்சயமாக மாநாடு குறிப்பிட்ட தேதியில் நடக்கும்," என்றார்.