பெரம்பலூர் எம்.பி. தொகுதிக்குள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி கரூர் மாவட்டத்தை சேர்ந்த குளித்தலை, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி, என 3 மாவட்டத்தை சேர்ந்த 6 தொகுதிகளை உள்ளடக்கியது என்பதால் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தை முசிறியில் நடத்தினார்கள்.
திருச்சியில் பிரமாண்டமான மாநாடுகளை நடத்திய கே.என்.நேரு ஒருபுறம், கரூரில் அதிரடியாக அரசியலை நிகழ்த்திய செந்தில்பாலாஜி ஒரு பக்கம், தமிழகத்தின் மிக பிரபலமான தொழில் அதிபர் பாரிவேந்தர் ஒரு பக்கம் என்ன 3 பேரும் இணைந்து நடத்திய பிரமாண்டமான பிரச்சார பொதுகூட்டம் எதிர்த்து போட்டியிடும் அதிமுகவினர் கிலியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்பு இப்படி ஒரு பொது கூட்டத்தை பெரம்பலூர் மாவட்டமே இதற்கு முன்பு பார்த்திருக்கவில்லை என்பதால் எல்லோரும் பிரமிப்போடு பார்த்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்,
நாடும் நமதே, நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்தோடுதான் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினேன். 2-வது நாளாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் தொடங்கி இருக்கிறேன். நாடு ஒரு மோசமான சூழ்நிலையில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் தவறான மனிதர்கள் ஆட்சியில் உள்ளனர். தவறான மனிதர்கள் என்ற வார்த்தை சரியா? தவறா? என பலமுறை யோசித்து ‘சரிதான்’ என்ற முடிவுக்கு வந்த பின்னரே இங்கு பதிவு செய்கிறேன். நரேந்திர மோடியோ, எடப்பாடி பழனிசாமியோ சரியான மனிதர்கள் அல்ல. மத்தியில் மோடி ஆட்சியாக இருந்தாலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியாக இருந்தாலும் மக்களை பற்றி சிந்திப்பதில்லை. இவர்கள் மக்களை காப்பாற்றுவதை தவிர்த்துவிட்டு, தங்களை காப்பாற்றி கொள்ளும் நிலையில்தான் உள்ளனர்.
அம்மா திமுகவாக இருந்த அதிமுக, தற்போது அடியாள் தி.மு.க.வாக மாறிவிட்டது. ஜெயலலிதாவின் பங்களா உள்ள கோடநாட்டில் காவலாளி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். ஏன்?, அங்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் அமைச்சர்கள் நடத்திய பேரம், கமிஷன், ஆதாரங்களை ஜெயலலிதா சேகரித்து வைத்திருந்தார். அதை வெளிவராமல் தடுக்கவே இந்த கொலைகள்.
கோடநாடு மர்மம் குறித்து எடப்பாடி வாய் திறக்காதது ஏன்?. ஏனென்றால் அந்த 5 கொலை குற்றச்சாட்டுக்கும் அவர் ஆளாகி உள்ளார். எனவே, இனியும் அவர் கோட்டையில் இருப்பது நியாயம் இல்லை. கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் உள்ளது.
மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் 122 பேர் உயிரிழந்தனர். வெளிநாட்டு கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக வாக்குறுதி அளித்தார் மோடி. ஆனால், 15 ரூபாய்கூட செலுத்தப்படவில்லை. பிரதமராக இருந்து இதுவரை 84 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கான செலவு ரூ.1,500 கோடி. அது யார் வீட்டு பணம்? நாட்டு மக்களின் வரிப்பணம். மோடி இந்திய பிரதமரா? அல்லது வெளிநாட்டு பிரதமரா? என்பதை சிந்திக்க வேண்டும்.
இந்த பிரமாண்ட கூட்டத்தை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் முகத்தை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. உங்கள் முகத்தை பார்த்த திருப்தியே போது என்று நினைக்கிறேன் என்று கூட்டத்தை பற்றி இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.
2011 ம் ஆண்டு ஜெ.ஹெலிகாப்டரில் முசிறிக்கு பிரச்சாரத்திற்கு வந்த போது பிரமாண்டமாக ஏற்பாடு செய்து இருந்தனர். அதை விஞ்சும் அளவிற்கு இந்த கூட்டம் இருந்தது என்கிறார்கள் அரசியல் விமர்சர்கள்.
பெரம்பலூர் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் பேசும் போது இது வெற்றி மாநாடு போல் உள்ளது. ஒரே இடத்தில் வாக்குசேகரிக்க ஏற்பாடு செய்த கூட்டணி கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்து கொடுத்த கே.என்.நேரு, செந்தில்பாலாஜி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.