2021 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற திமுக, அந்தக் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினை முதலமைச்சராக பதவியேற்பதற்கு ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், இன்று (07.05.2021) பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிலையில், 10 வருடங்களுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், அதே தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திடம் வெற்றியைப் பறிகொடுத்த புல்லட் ராமச்சந்திரன் தலைமையிலான திமுக கூட்டணிக் கட்சியினர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இதேபோல மாவட்டம் முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகர் தொடங்கி அனைத்து கிராமங்களில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்டத்தில் இருந்து ரகுபதி, மெய்யநாதன் என இரு அமைச்சர்கள் பதவியேற்றதால் கூடுதல் உற்சாகமாக கொண்டாடினர்.
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் திமுக பொன். லோகநாதன், நிர்வாகிகள் ஆகியோர் கட்சிக் கொடி ஏற்றி வெற்றி முழக்கமிட்டனர். தொடர்ந்து சிபிஐ முன்னாள் மாவட்டச் செயலாளர் செங்கோடன் முன்னிலையில் இனிப்புகளுடன் மரக்கன்றுகளும் வழங்கி கொண்டாடினார்கள். இந்த நாளில் வழங்கப்படும் மரக்கன்றுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து பல வருடங்களுக்கு நிலைத்து நிற்கும் என்றனர். இப்படி கீரமங்கலம், செரியலூர், வடகாடு, மாங்காடு, அணவயல் உட்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் கொண்டாடப்பட்டது.