காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா நாளை தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, பெருநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வந்த முன்னேற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வெள்ளியன்று அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர், தைலக் காப்பு சடங்கு செய்யப்பட்டு வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை காலை 6 மணிக்கு பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளிப்பார். இந்த விழாவில் பங்கேற்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காஞ்சிபுரம் செல்கிறார். இரவு காஞ்சிபுரத்தில் தங்கும் அவர், அதிகாலையில் அத்திவரதரை தரிசிப்பார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய இருப்பதால், மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி பேருந்து நிலையம் அமைப்பது, வாகன நிறுத்தம், மருத்துவ மையம், கண்காணிப்பு மையங்கள், பக்தர்கள் வருகைக்காக வரிசை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அத்திவரதர் பெருவிழாவையொட்டி வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என் எதிர்பார்க்கும் நிலையில், உள்ளூர் மக்களுக்கு ஆன்லைனில் ஆதார் பதிவு செய்து ஒரு முறை இலவச தரிசனமும், சிறப்பு தரிசனத்திற்கான நுழைவு சீட்டுகள் நகரில் ஆங்காங்கே உள்ள 7 மையங்களில் இன்று முதல் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.