தென்காசியைத் தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் துவக்கும் பொருட்டு வரும் 22ம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்காசி நகரில் துவக்கவிருக்கிறார்.
தென்காசியுடன் இணைக்கக் கூடாது என்று ஏற்கனவே சங்கரன்கோவில் பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ஆனால் மக்களின் கண்டனம் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்யாமல் சங்கரன்கோவிலையும் இணைத்து. வெளியிடப்பட்டதால் நகரில் கண்டனப் போஸ்டர்கள் கிளம்பின. தற்போது எதிர்ப்புப் போராட்டம் மற்றப் பகுதியிலும் விரிவடையத் தொடங்கியுள்ளது.
நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசி மாவட்டம் தற்போது உதயமாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தோடு இணைக்க கடையம், பாப்பாக்குடி ஓன்றியத்திற்கு உட்பட்ட 4 ஊராட்சி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அம்பை தாலுகாவில் இருந்து கடையம், ஆழ்வார்குறிச்சி வருவாய் குறுவட்டங்களுக்கு உட்பட்ட பள்ளக்கால், ரங்கசமுத்திரம், அடைச்சாணி, இடைகால் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட தென்காசி மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அரசாணையில் அறிவிப்பு கொடுக்கப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் பள்ளக்கால் பொதுக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில் தென்காசி மாவட்டத்துடன் பள்ளக்கால், ரங்கசமுத்திரம், அடைச்சாணி, இடைக்கால் ஊராட்சிப் பகுதிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, மீண்டும் நெல்லை மாவட்டத்தில் அம்பை தாலுகாவில் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இக்கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் அனைத்து கிராமங்களிலும் எதிர்ப்புப் தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம், உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு, குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை திரும்ப ஒப்படைப்பது.
உண்ணாவிரதம், பஸ் மறியல் உள்ளிட்ட தொடர் போரட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பாப்பாக்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், தி.மு.க. செயலாளர் மாரிவண்ணமுத்து, மார்க்சிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினர் சந்திரசேகரன், பள்ளக்கால் அடைச்சாணி, இடைக்கால் ரங்கசமுத்திரம், ஊராட்சியைச் சேர்ந்த கிராம அனைத்து சமுதாய தலைவர்கள், ஊர்த்தலைவர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.