வி.ஐ.பிக்களின் பாலியல் தேவைகளுக்கு கல்லூரி மாணவிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கெட்ட நோக்கத்துடன் பேசிய நிர்மலாதேவி, தூண்டுகோலாக இருந்த பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய மூவரும் கைதாகி மதுரை சிறையில் அடைபட்டிருக்கின்றனர்.
சிறைவாசிகளிடம் கருப்பசாமியும் முருகனும் “ஜாலியாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு யாருக்குத்தான் இல்லை. நாங்களும் அப்போது அந்த மனநிலையில்தான் இருந்தோம். ஆனால், இந்த அளவுக்கு அவமானப்பட்டு சிறைக்கெல்லாம் செல்வோம் என்று கனவிலும் நினைத்ததில்லை. தவறான வழியில் அடையும் தற்காலிக சந்தோஷம், நிரந்தரமாக நிம்மதி இல்லாமல் பண்ணிவிடும் என்ற உண்மை பட்டபிறகுதான் தெரிகிறது.” என்று வருந்துகிறார்களாம்.
நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண்-2 இல் முருகனும் கருப்பசாமியும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். ஜூலை 24-ம் வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறார் நீதித்துறை நடுவர் திலகேஸ்வரி. பிறகென்ன? சிறையில் மீண்டும் புலம்ப வேண்டியதுதான்!
பெண்ணாக இருந்தாலும், இன்றைய உலகில் படித்தால்தான் எதிர்காலம் என்பதை உணர்ந்து பெற்றோர் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களின் குடும்ப வறுமையைத் தெரிந்துகொண்டு, “நாங்கள் சொன்னபடி கேட்டால், உங்கள் வாழ்க்கை ஓஹோவென்றாகிவிடும்” என்று ஆசைத்தீயை மூட்டி, அனுபவிக்கத் துடித்ததும், தாத்தாக்கள் மற்றும் ஹை - அஃபிசியல்ஸின் படுக்கையறைக்கு அனுப்புவதற்கு ஆலாய்ப் பறந்ததும், சாதாரண குற்றமா? இத்தகையோருக்காகத்தான், உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும் என்ற பழமொழியை எப்போதோ உருவாக்கி வைத்துவிட்டார்கள் நம் முன்னோர்கள்.