தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம்.. இந்த ஊர் பெயரைக் கேட்டாலே போதும் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்ட மக்களும் சொல்வது பட்டுப்புடவை.. ஆம் பட்டுக்கு பேர் போன திருப்புவனத்தில் தான் இப்போது கூட்டுப் பாலியல் என்று பெயர் கெட்டுக்கிடக்கிறது.
அதே ஊரைச் சேர்ந்த இளம் பெண் பாரதி (21) ( பெயர் மாற்றம் ) சில மாதங்களுக்கு முன்பு தந்தை இறந்த நிலையில் குடும்ப சூழ்நிலையை நினைத்து நானும் வேலைக்கு போறேன் என்று சொன்ன பாரதியிடம் வேலைக்கு வேண்டாம் ஊரெல்லாம் கெட்டுக் கிடக்குது என்றார் அம்மா.. இல்லம்மா பத்திரமா போயிட்டு வருவேன் என்று சொன்ன பாரதி அங்குள்ள மீரா பட்டு சென்டருக்கு வேலைக்கு சென்றார்.
தீபாவளி விடுமுறை அடுத்த நாள் அதே கடையில் வேலை செய்யும் காத்தாயி அம்மன் கோயில் தெரு தர்மலிங்கம் மகன் சின்னப்பா (43).. எங்க வீட்ல அமாவசை விருந்து எங்க வீட்டுக்கு வா என்று அழைக்க சக ஊழியர் அழைப்பதால் நம்பி வீட்டுக்கு போன பாரதியை ரத்தம் கொட்ட கொட்ட மயங்கிய நிலையில் மருத்துவமனையில் தான் பார்த்தார்கள் தாயும் உறவினர்களும்..
சின்னப்பா வீட்டில் மதுவின் மயக்கத்தில் இருந்த மீரா பட்டு சென்டர் முதலாளி கார்த்திக் உள்ளிட்ட சில நண்பர்கள் பாரதிக்கும் குளிபானம் கொடுத்துள்ளனர். அதில் என்ன கலந்திருந்தது என்பது அவர்களுக்கு தான் தெரியும். சில மணி நேரம் சாத்தப்பட்ட கதவுகளுக்குள் பாரதியின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை. ரத்தம் கொட்ட தொடங்கியதும் ஒரு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு தப்பிவிட்டனர்.
விபரம் அறிந்து அங்கே போன உறவினர்களிடம் எங்களால காப்பாற்றமுடியாது வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க என்று சொல்ல மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பல தையல் போடப்பட்ட பிறகே ரத்தம் வெளியேறுவது நின்றுள்ளது.
அதன் பிறகு காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் சின்னப்பாவை மட்டும் கைது செய்துள்ளனர். இதில் பட்டு சென்டர் முதலாளி முதல் அவர்களின் கூட்டாளிகளும் இணைந்து பாரதியை சீரழித்துள்ளனர். அதனால் அவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாரதி குடும்பத்திற்கு இழப்பீடு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மாதர் சங்கத்துடன் இணைந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலரிடமும் மனு கொடுத்துவிட்டு கடையடைப்பு போராட்டமும் நடத்தியுள்ளனர்.
மாதர் சங்கம் மாவட்டச் செயலாளர் தமிழ்செல்வி.. சமீப காலமாக கூட்டுப்பாலியல் என்ற கலாச்சாரம் அதிகமாக பரவிவிட்டது. மதுவின் போதையில் இருக்கும் இது போன்ற அரக்கர்கள் ஒன்று சேர்ந்து குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு செல்லும் பெண்களை குறிவைத்து இது போன்ற கயவர்கள் செயல்படத் தொடங்கியுள்ளனர். அது போல தான் திருப்புவனம் பாரதிக்கு நேர்ந்த கொடூரமும் நடந்துள்ளது. இது போன்ற கூட்டு பாலியல் வன்முறை சம்பவம் கடந்த மாதம் இறுதியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடியில் மருந்துக்கடைக்கு சென்ற கஸ்தூரி (19) என்ற பெண்ணுக்கும், கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி பள்ளி மாணவி மாணவிக்கும் இப்படி நேர்ந்துள்ளது. அடுத்தடுத்த இப்படி கூட்டு பாலியல் வன்முறை நடக்க காவல் துறை போதிய நடவடிக்கை எடுப்பதில்லை என்பதுடன் அதற்காண ஆதாரங்களையும் சாட்சியங்களையும் வழக்குகளில் சேர்ப்பதில்லை அதனால் அவர்கள் கொஞ்ச நாட்களில் வெளியே வந்து சுதந்திரமாக செயல்படுகிறார்கள்.
இனிமேலாவது பாரதி சம்பவத்தில் சம்மந்தப்பட்ட அத்தனை பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையை தமிழகம் தழுவிய போராட்டமாக கொண்டு செல்ல தயாராக இருக்கிறோம் என்றார்.