Skip to main content

மணல் திருடர்களுடன் கூட்டு... மதுபோதையில் வாக்கி டாக்கியைப் பறிகொடுத்த தலைமைக் காவலர்!

Published on 25/09/2021 | Edited on 27/09/2021

 

Joint with sand thieves ... Chief Constable who snatched a walkie talkie under the influence of alcohol!

 

மணல் திருடர்களுடன் கூட்டு சேர்ந்து மது குடித்த இடத்தில் வாக்கி டாக்கியை மணல் திருடர்களிடமே பறிகொடுத்துவிட்டு மது போதையில் விழுந்து எழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தலைமைக் காவலர். தலைமைக் காவலருக்கு மது ஊற்றிக் கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த வாக்கி டாக்கியைத் திருடிய 4 மணல் திருடர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் தலைமைக் காவலர் அன்பழகன். இவர், அப்பகுதி மணல் திருடர்களிடம் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பவர். சம்பவ நாளிலும் சில மணல் திருடர்களிடம் பேசியுள்ளார். யாரும் இவரைக் கவனிக்கவில்லை. அதன் பிறகு வழக்கமாக சிக்காத திருட்டு மணல் வாகனம், சம்மட்டி விடுதி காவல் எல்லையில் சிக்கிக்கொண்டது. அதன் பிறகு சிறிது நேரத்தில் தலைமைக் காவலர் அன்பழகனை ஒரு பேக்கரிக்கு அருகே வரச்சொல்லி அழைத்த மணல் திருடும் கும்பல், “உங்களுக்கு மாமூல் கொடுக்கவில்லை என்று எங்கள் வாகனத்தைச் சிக்கவைத்துவிட்டீர்கள். நீங்களே மீட்டுக் கொடுங்கள்” என்று கேட்டவர்கள், கூடவே மது விருந்தும் நடத்தியுள்ளனர். மது போதை அதிகமான நேரத்தில் மணல் வாகனம் மீட்கப்படாமல் போனதால் காவல்துறையிடம் இருந்த வாக்கி டாக்கியை அவருக்கே தெரியாமல் திருடி வைத்துக்கொண்டனர்.

 

வாக்கி டாக்கி திருடப்பட்டது தெரியாமல் அங்கிருந்து சென்ற தலைமைக் காவலர் அன்பழகன், மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் பற்றித் தெரியாத கீரனூர் காவல் நிலைய காவல்துறையினர் அன்பழகனைத் தேடிக் கண்டுபிடித்து வாக்கி டாக்கி பற்றி கேட்க, அதன் பிறகே வாக்கி டாக்கி காணாமல்போனது தெரிந்திருக்கிறது தலைமைக் காவலருக்கு. உடனே அன்பழகனை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், அவருடன் மது குடித்த 4 பேரைத் தேடிப் பிடித்து விசாரித்தபோது, சம்மட்டி விடுதியில் பிடிபட்ட மணல் வாகனத்தை மீட்பதற்காக அன்பழகனை அழைத்துச் சென்றோம். ஆனால் வாகனத்தை மீட்டுத்தரவில்லை. அதனால் எங்களுடன் சேர்ந்து மது குடிக்க வைத்து அவரிடம் இருந்த வாக்கிடாக்கியை அவருக்கே தெரியாமல் திருடி பெங்களூருவில் ஒரு குவாரி மணலில் புதைத்து வைத்திருப்பதாகக் கூறி வாக்கி டாக்கியை எடுத்துக் கொடுத்துள்ளனர். 

 

சம்பவம் குறித்து கீரனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷின் புகாரின் பேரில் மாத்தூர் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வழக்குப் பதிவுசெய்து இன்பசுரேஷ், முகேஷ் கண்ணன், சீனிவாசன், செந்தில் ஆகிய நான்கு பேரை கைது செய்தார். இதில் முகேஷ் கண்ணன், அதிமுக ஐ.டி. விங்க் பிரமுகராவார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“போலீஸ் என் புடவையை உருவி அடிச்சாங்க..”;கதறும் தாய் - நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
police severely beaten the person who took him for questioning In Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவில் கடந்த 9 ஆம் தேதி முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட ஒரு கும்பல் ஒரு பெண்ணை தாக்கி தங்க நகைகளை பறித்துக் கொண்டு செல்ல, அந்தச் சம்பவம் குறித்த புகார் மணமேல்குடி காவல் நிலையம் வந்துள்ளது. புகார் கொடுத்தவர்களே சில சந்தேக நபர்களையும் அடையாளம் சொல்ல போலிசார் விச்சூர் அருகே உள்ள அம்மாபட்டினம் அஞ்சல் ஆதிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் பாண்டியன் மற்றும் அவரது 17 வயது கூட்டாளியை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் விசாரணையில் நகைகள் கிடைக்கவில்லை. 

சில நாட்கள் வரை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் வீடும் திரும்பவில்லை. சிறைக்கும் அனுப்பவில்லை என்பதால் பாண்டியனின் தாயார் காளியம்மாள் மணமேல்குடி, மீமிசல் காவல் நிலையங்களுக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் அங்கே இல்லை என்று போலிசார் கூறியுள்ளனர். அதே நேரத்தில் திருட்டு போன நகை பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. போலீசார் அழைத்துச் சென்ற தன் மகனை காணவில்லை என மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியதுடன், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். மேலும், வட்ட சட்டப்பணிகள் குழுவிலும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு கொடுத்திருந்தார்.

இந்த நிலையில்.. கடந்த 18 ஆம் தேதி கொள்ளுவயல் ஆற்றுப்பாலம் அருகே, 1.150 கிலோ கிராம் கஞ்சாவுடன் பாண்டியன் வந்ததாக, கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ரேக்ளா பந்தயம் பார்க்கப் போன இடத்தில் பாண்டியனுக்கு காயமடைந்துள்ளதாக வாக்குமூலம் பதிவு செய்து மருத்துவச் சான்றும் பெற்று, நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தி உள்ளனர். நீதிமன்ற சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், புதுக்கோட்டை சிறை நிர்வாகம் காயத்துடன் உள்ளவரை சிறையில் வைக்க முடியாது என்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டனர். மருத்துவமனையில் சேர்த்த பிறகு, மருத்துவர்கள் செய்த சோதனையில் பாண்டியனின் பின்புறம் இரு பக்கமும் பலத்த காயம் ஏற்பட்டு, இதனால் உப்பின் அளவு அதிகரித்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸ் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் தான் போலிசார் விசாரணை என்ற பெயரில் தன் மகனை உணவு, தண்ணீர் கொடுக்காமல் அடித்ததால் சிறுநீரகம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் என் மகன் உயிரைக் காப்பாற்ற உயர் சிகிச்சை அளிக்க வேண்டும், என்மகனை தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளிய போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வழக்கரிஞர் அலாவுதீன் மூலம் மனு கொடுத்தார். இது குறித்த செய்தி நக்கீரன் இணையத்தில் செய்தி மற்றும் வீடியோ வெளியான நிலையில், தீவிர சிகிச்சை தொடங்கி நடந்து வருகிறது. தற்போது நீதிமன்றத்தையும் நாடியுள்ளார். இந்த நிலையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் பாண்டியன் மற்றும் அவருக்குத் துணையாக உள்ள அவரது அம்மா காளியம்மாள் ஆகியோர் நம்மிடம் பேசினர். 

அந்தப் பேட்டியில் நம்மிடம் மருத்துவமனையில் இருந்தபடி பேசிய பாண்டியன், “சார் பச்சைத் தண்ணி கூட குடுக்காமல் அடிச்சாங்க சார்.. ஒரு இடத்துல தண்ணி ஊத்துவிட்டு அதாவது சாராயத்தை ஊத்திவிட்டு என்னை அடித்தார்கள்.. என அவர் கூறும்போது கண்களில் நீர் கோர்த்து முகம் ஆதங்கத்தில் கொப்பளித்தது. பாண்டியனின் அம்மா கூறும்போது, நகையை காணும் என போலீசார் என்னிடம் வந்து என் புடவையை உருவினார்கள். நகையை நான் மறைத்து வைத்துள்ளேன் எனச் சொல்லி என்னை அடித்தார்கள், என் மகனை திருட அனுப்பினேன் என ஏசினார்கள். என் மகனை நான் அப்படி வளர்க்கல ஐயா எனச் சொன்னேன். என் முகத்தில் காரி துப்பிவிட்டு சென்றார்கள். என்றார் வேதனை படிந்த குரலில். 

சாத்தன்குளம் போலவே புதுக்கோட்டை மணமேல்குடி சம்பவம் நடந்துள்ளதாகக் கூறும் மனித உரிமை ஆர்வலர்கள் உரிய விசாரணை வேண்டும் என்கின்றனர்.

Next Story

'பேருந்தில் ஏற்ற மறுக்கப்பட்ட பெண் தூய்மைப் பணியாளர்கள்' - இருவர் சஸ்பெண்ட்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'Women sanitation workers refused to board the bus' - two suspended

தஞ்சையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தூய்மைப் பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பதாக 50க்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகளில் தூய்மைப் பெண் பணியாளர்கள் ஏற முயன்ற நிலையில் பேருந்து நடத்துனர்கள் பேருந்தில் ஏற்ற மறுப்பு தெரிவிப்பதோடு, அலைக்கழிப்புக்கு ஆளாக்குவதாகவும் புகார்கள் எழுந்தது. இந்நிலையில் அலைக்கழிப்புக்கு ஆளான பெண்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் சாலையில் அமர்ந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள்  பேச்சுவார்த்தை நடத்தி மாற்றுப் பேருந்து மற்றும் ஆம்புலன்சில் பெண் பணியாளர்களைப் பணிக்கு அனுப்பி வைத்தனர்.

'Women sanitation workers refused to board the bus' - two suspended

இதில் பாதிக்கப்பட்ட பெண் தூய்மையாளர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நாங்கள் 7:00 மணிக்கு டூட்டிக்கு போகணும். ஆபீசில் சொன்னாலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். 7:15 மணிக்குத்தான் பஸ் எடுக்க வேண்டும் எனக் கலெக்டர் சொல்லி இருக்காருன்னு சொல்கிறார்கள். அதான் கலெக்டர் வரட்டும் என நாங்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினோம். எங்களுடைய மேனேஜர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் நாங்கள் இப்பொழுது போகிறோம். பஸ்ஸை நிப்பாட்ட சொன்னாலும் எந்தப் பஸ் ஸ்டாப்பிலும் நிப்பாட்டுவது கிடையாது. நாயை விடக் கேவலமாக நினைக்கிறார்கள்'' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பேருந்து நடத்துநர் மற்றும் பேருந்து நிலையத்தின் டைம் கீப்பர் ஆகிய இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்குப் பிறகு சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.