ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
’’பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ –ஜியோ அமைப்பு நேற்று முதல் நடத்தவிருக்கிற காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்கள் முன்வைத்திருக்கிற கோரிக்கைகள் மிகத் தார்மீகமானது. அதற்குச் செவிசாய்த்து அதனை நிறைவேற்றித் தந்து சிக்கலைச் சுமூகமாகத் தீர்க்க வேண்டிய தமிழக அரசு அதனைச் செய்ய மறுத்து அலட்சியம் காட்டி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஜாக்டோ – ஜியோ அமைப்பு இதே கோரிக்கைகளை முன்வைத்து ஏற்கனவே பலமுறை போராடியும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வராததன் விளைவாகவே தற்போது மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் உந்தித் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கக் கட்டமைப்பின் தூண்களாக, அரசின் ஆணிவேர்களாக இருக்கிற அரசு ஊழியர்களையே தங்களது உரிமைக்காகவும், ஊதியத்திற்காகவும் வீதியில் இறங்கிப் போராடுகிற நிலைக்குத் தள்ளியிருக்கும் அரசின் செயல் வெட்கக்கேடானது.
புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளாகியும் அதற்குரியப் பயன்கள் அரசு ஊழியர்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை. இதனால், ஓய்வூதியம் பெறாமலேயே பல அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்றுவிட்ட கொடுமையும் நடந்தேறியிருக்கிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என நீண்ட நெடுங்காலமாக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தான் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவேன் என 2011ல் வாக்குறுதி அளித்து அதிகாரத்திற்கு வந்த அம்மையார் ஜெயலலிதா அதனை நிறைவேற்றாது, காலம்போன கடைசியில் 2016ல் தேர்தலுக்கு முன்பாகச் சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்தார். பின்னர், அக்குழுவும் கலைக்கப்பட்டு அமைக்கப்பட்ட ஸ்ரீதர் தலைமையிலான குழு ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. இதன்மூலம் அரசின் அலட்சியமும், அக்கறையின்மையும்தான் நீண்டுகொண்டிருக்கும் இவ்வளவு சிக்கல்களுக்கும் காரணம் என்பது தெளிவாகிறது.
அரசு ஊழியர்கள் தங்களுக்கான உரிமையை கேட்டுத்தான் போராடி வருகின்றனர். அவர்கள் முன்வைத்திருக்கிற கோரிக்கைகள் நியாயமானது மட்டுமல்லாது அரசால் சாத்தியப்படுத்தக்கூடியதும்தான்! எனவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தால் பாதிக்கப்பட்டு நிற்கிற அரசு ஊழியர்களை மீட்பதற்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதே உகந்ததாக இருக்கும். மேற்கு வங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அம்மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. அதனைப் போல, தமிழக அரசும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினாலேயே ஒழிய, இச்சிக்கலைத் தீர்க்க வேறு வழியில்லை. ஆகவே, ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.’’