உரிமமின்றி செயல்பட்டு வந்த 12 மாம்பழ கிடங்குகளுக்கு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டு அறிவிக்கை அளித்துள்ளனர்.
சேலம் மாநகரில் கார்பைடு கல் மூலம் மாங்காய்களை செயற்கையாகப் பழுக்க வைப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறைக்குப் புகார்கள் சென்றன. இதையடுத்து, அத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் சேலம் சின்னக்கடை வீதி, அரிசிபாளையம் சாலை, சத்திரம் ஆகிய இடங்களில் மொத்தமாகவும், சில்லரையாகவும் மாம்பழங்களை விற்பனை செய்து வரும் 21 கிடங்குகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) ஆய்வு செய்தனர்.
மாம்பழ வியாபாரிகள் பலர், உணவுப்பாதுகாப்புத்துறை உரிமம் பெறாமலேயே வணிகம் செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. சில கிடங்குகளில் கார்பைடு கற்கள் மூலம் மாங்காய்கள் பழுக்க வைக்கப்படுவதும் தெரிய வந்தது. இதையடுத்து உரிமமின்றி செயல்பட்டு வந்த 12 மாம்பழ கிடங்கு உரிமையாளர்களுக்கு, உணவுப்பாதுகாப்பு சட்டம் பிரிவு 31 (1)இன் கீழ், அறிவிக்கை வழங்கப்பட்டது.
மேலும், மாங்காய்களை செயற்கையாகப் பழுக்க வைப்பதற்காகப் பயன்படுத்திய ரசாயனக் கலவைகள், தெளிப்பான்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு உணவுப்பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006இன் படி, நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வகையான உணவுப்பொருள் விற்பனை கடைகளும் உணவுப்பாதுகாப்புத்துறையின் உரிமம் பெறுவது கட்டாயம்.
தற்போது மாம்பழ வியாபாரிகள் மீது மின்னஞ்சல் மூலமாக வந்த புகாரின்பேரில் கிடங்குகளில் ஆய்வு செய்யப்பட்டு, உரிமமின்றி செயல்பட்ட 12 கிடங்கு உரிமையாளர்களுக்கு குற்றச்சாட்டு அறிவிக்கை வழங்கப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,'' என்றனர்.