மறைந்த முன்னாள் முதல்வர் “ஜெ“வின் ஆட்சியின்போது தலைமை செயலாளராக இருந்தவர் ராம் மோகன் ராவ். இவர் பணியிலிருந்த போதுதான் தலைமை செயலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. பணி ஓய்வுக்குப் பின்பு பூர்வீக ஆந்திரா சென்ற ராம்மோகன் ராவ் பின் சென்னையிலுமிருக்கிறாராம். சென்னையைத் தலைமையிடமாக கொண்டு டாக்டர் ஆர்.எம்.ஆர்.பாசறை என தன் பெயரில் பாசறை ஒன்றும், நாயக்கர் நாயுடு பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் ஒருங்கிணைப்பாளராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார். பாசறையும் பேரவையும் தான் சார்ந்த சமூக ரீதியாக அமைத்துக்கொண்டு சென்னையிலிருந்தவாறு அதன் பணிகளைக் கவனிக்கும் ராமமோகன் ராவ் அமைப்பிற்கென்று பொறுப்பாளர்களையும் நியமித்திருக்கிறாராம். அவர் செல்லுமிடமெங்கும் அவரது நாயுடு சார்ந்த அமைப்பினருக்குத் தகவல் போய்விடுவதால் அந்நேரத்தில் அமைப்பின் ஆதரவாளர்கள் வந்துவிடுகின்றனர்.
தன்னுடைய பணிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் பிற்காலங்களில் தனக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக கவசமாக இந்தப் பேரவை உதவுமாம். அதன் காரணமாகவே வீரபாண்டிய கட்டபொம்மனின் 221வது நினைவு தினமான அக் 16 அன்று அந்த மாமன்னன் தூக்கிலிடப்பட்ட தூத்துக்குடி மாவட்ட கயத்தாறுப் பகுதிக்கு வந்த ராம மோகன் ராவ், அவரது சிலைக்கு மாலை மரியாதை செலுத்திவிட்டுத் துணிச்சலாகவே “ஜெ“யின் மரணம் பற்றிய பின்னணியின் மர்மம் நிறைந்ததை பின்னால் தெரிவிப்பதாகச் சொல்லி ஈர்ப்பையும் பரபரப்பையும் கிளப்பியிருக்கிறார்.
என்னுடைய பணிக்காலத்தில் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியது தவறான நடவடிக்கை. அந்த நடவடிக்கையைப் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்று எனக்கு தெரியாது. தேவையில்லாமல் என்மீது பெரிய பழியைச் சுமத்தியிருக்கிறார்கள், நான் சுத்தமானவன். பலர் பலவிதமாகப் பேசிக் கொள்கிறார்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொல்லவில்லை. அந்த அவசியம் எனக்கில்லை.
அம்மா மரணத்திற்குப் பின்னால் ஏதோ சதி நடந்திருக்கிறது. என்ன நடந்தது.யார் என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. நான் யாரையும் பழி சுமத்த நினைக்கல்ல. ஆனால் அதில் ஒரு சதி நடந்திருக்கு. அதைச் சொல்ல இது தருணமல்ல. நேரம் வரும், அப்போது நான் சொல்வேன் என்று சொல்லி பரபரப்பு தீயைக் கொளுத்திவிட்டுக் கிளம்பினார் ராம்மோகன் ராவ்.