![incident in kovai soolur](http://image.nakkheeran.in/cdn/farfuture/DcBmKZkj9xbH8Qga6NtFQXl-6h96fRPJlEzx1GpOQ40/1607614084/sites/default/files/inline-images/4643643.jpg)
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி, ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் பத்மாவதி தம்பதியினர். இருவருக்கும் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ஊரகப்பகுதிகளில் கிடைக்கும் பழைய பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரிக்கும் வேலை செய்து வரும் இருவரும், குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்கள்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரித்து விற்ற பணத்தில், இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திவிட்டு, வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதில் ஆறுமுகம் தனது மனைவியை ஆயுதத்தால் தாக்கியதில், ரத்த வெள்ளத்தில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
![incident in kovai soolur](http://image.nakkheeran.in/cdn/farfuture/gB64rYk9aeuZQ7SKOcYUkusgVR3ujsbP1sv3qFFRyWs/1607614106/sites/default/files/inline-images/d1fd962b-b958-414d-beeb-528960cdb28b.jpg)
குடிபோதையில் இருந்த ஆறுமுகம் பத்மாவதியின் உடலின் அருகிலேயே படுத்து உறங்கிவிட, இன்று அதிகாலை அருகில் வசிக்கும் அவர்களது மகள் சென்று பார்த்தபோது பத்மாவதி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனிடையே சடலத்தின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகத்தை எழுப்பி இதுகுறித்து கேட்டபோது, இரவு குடிபோதையில் போதையில், தனக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்திற்குக் கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து, சம்பவ இடத்தில் உள்ள தடயங்களைச் சேகரித்ததுடன், பத்மாவதியின் கணவன் ஆறுமுகத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.