Prime Minister Modi meets US President Trump

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக பாரீஸில் உள்ள கிராண்ட் பலாய்ஸில் நடந்த செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்றார். தலைநகர் வாசிங்டனில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்டை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தீவிரவாத ஒழிப்பு, சைபர் பாதுகாப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்பட்டது.அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அந்நாட்டுத் தொழிலதிபர் எலான் மஸ்க்கை சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக, பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்று அதிகாலை சந்தித்துப் பேசினார்.

Advertisment

அப்போது இரு தலைவர்களும்வரிக்கொள்கை, எண்ணெய், எரிசக்தி, அணுசக்தி, சட்டவிரோத குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இந்தியர்களை, இந்தியாவிற்குத் திரும்ப அழைக்கப் பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகப் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான ஒரு சிறந்த சந்திப்பு நடைபெற்றது. எங்கள் பேச்சுவார்த்தைகள் இந்தியா-அமெரிக்கா நட்புறவுக்குக் குறிப்பிடத்தக்க உத்வேகத்தை அளிக்கும். அதிபர் டிரம்ப் அடிக்கடி அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள் (MAGA) எனப் பேசுவார். மேலும், இந்தியா-அமெரிக்கா இணைந்து, செழிப்புக்காக ஒரு கூட்டாண்மையைக் கொண்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.