எந்த அரசு அதிகாரியின் கையெழுத்துக் கேட்டாலும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் கையெழுத்தை அச்சு அசலாக போட்டு சான்றிதழ் வழங்கிய வழக்கறிஞர்கள் இருவரை கைது செய்துள்ளது சிவகங்கை மாவட்டக் காவல்துறை.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி காவல்துறை சரகம் கல்லூரணியை சேந்தவர் சசிவர்ணம் மகன் கலையரசன். இவர் ரூ.75 ஆயிரம் பெற்றுக் கொண்டு தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்திற்கான பத்திரத்தை கரூர் கிராமத்தினை சேர்ந்த பழனிச்சாமி மகன் பெரியசாமியிடம் அடகு வைத்துள்ளார். ஆரம்பக்காலக்கட்டத்தில் வட்டியினை மட்டும் செலுத்தி வந்த இவர், மொத்த அசலையும் செலுத்தி தனது நிலப்பத்திரத்தினை திரும்பக் கேட்டிருக்கின்றார். நிலத்துப் பத்திரத்தை தொலைத்த பெரியசாமியோ ஆரம்பத்தில் கலையரசனை அலைக்கழித்துவிட்டு, விவகாரம் விபரீதமாவதை தொடர்ந்து குறிப்பிட்டக் கால அவகாசம் கேட்டுள்ளார். இவ்வேளையில், இளையான்குடி பகுதியில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் பாலையா மற்றும் பாண்டியனை அணுகியுள்ளார் பெரியசாமி. குறிப்பிட்ட இரு வழக்கறிஞர்களும் கலையரசனை சந்தித்து, " நீங்கள் பத்திரம் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்து, அதன்பின் இன்ஸ்பெக்டர் தரும் சான்றிதழைக் கொண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தினை அனுகினால் உங்களுக்கு நகல் பத்திரம் கிடைக்கும். அதற்கு நாங்கள் பொறுப்பு. செலவுகளை பெரியசாமி ஏற்றுக்கொள்வதாக ஏற்றுக்கொண்டார்." என சமாதானம் பேசி நம்பிக்கையளிக்க அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் கூறியது போலவே இன்ஸ்பெக்டர் ( ரப்பர் ஸ்டாம்ப் ) முத்திரையுடன் கூடிய கையெழுத்து சான்றிதழைக் கொடுத்துள்ளனர். அதனைக் கொண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க ,கையெழுத்திட்டது இன்ஸ்பெக்டர் ஜெயராணி அல்ல.. அது போலி கையெழுத்து என குட்டு வெளிப்பட்டது. பத்திரவுப் பதிவு அலுவலகத்தினர் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாலையா மற்றும் பாண்டியன் ஆகிய இரு வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்.
விசாரணையில், " வழக்கறிஞர்களாக இருந்து கொண்டு அனைத்து விதமான டாக்குமெண்டுகளை தயார் செய்ததும், பல உயரதிகாரிகளின் கையெழுத்து போலியாக கையெழுத்திட்டு வருமானம் ஈட்டி வந்ததும் தெரியவர, சமீபத்தில் இளையான்குடி பகுதியில் வழங்கப்பட்ட அனைத்து தடையில்லா சான்றிதழ்களின் உண்மைத்தன்மையையும் சோதித்து வருகின்றனர் நில அபகரிப்பு பிரிவு மற்றும் இளையான்குடி காவல் நிலைய பொறுப்பாளருமான இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையிலான இளையான்குடி போலீசார். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.