இந்திமொழி திணிப்புக்கு எதிராக சமீபத்தில் வாள் சுழற்றியிருந்தார் திமுக எம்.பி.கனிமொழி. இது தேசிய அளவில் பூதாகரமாக எதிரொலித்த நிலையில், அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை போலீசாருக்கு , இந்தி மொழி தெரியாதா ? என யாரிடமும் கேள்வி எழுப்பப் கூடாது என அழுத்தமான உத்தரவுகளைப் பிறப்பித்தது மத்திய மோடி அரசு.
குறிப்பாக, பிரதமர் மோடியின் அலுவலக அதிகாரிகள் இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தனர். இதனையடுத்து அந்த விவகாரம் அமைதியானது. ஆனால், இந்தி மொழிக்கு எதிரான எதிர்ப்புகளை தற்போது தமிழகத் திரைத்துறை பிரபலங்கள் கையிலெடுத்திருக்கிறார்கள். இவர்களின் நூதனப் பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்திக்கு எதிராக டீ-சர்ட் புரட்சியை உருவாக்கி வருகின்றனர்.
இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா , நடிகர்கள் மெட்ரோ சிரீஷ், பாக்கியராஜின் மகன் சாந்தனு, இவரது மனைவி கீர்த்தி உள்ளிடோர், இந்தி தெரியாது போடா , நான் தமிழ்ப் பேசும் இந்தியன் என்கிற வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ-சர்ட்டுகள் அணிந்து போஸ் கொடுத்து வருவதுடன் அதே டீ-சர்ட்டுகளை அணிந்து வலம் வரவும் செய்கிறார்கள்.
இவர்களது இந்த பிரச்சாரம் வைரலாகி வருவதுடன் பரபரப்பாகவும் கவனிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ,இந்தி மொழிக்கு எதிராக அவர்கள் அணிந்துள்ள படங்களை சேகரித்து பாஜக தலைமைக்கு அனுப்பி வருகிறார்கள் தமிழக பாஜகவினர். இதற்கிடையே , திரைப்பிரபலங்களின் இந்த பிரச்சாரத்தைக் கண்டு , இண்டர்ஸ்டிங் என ட்வீட் செய்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார் கனிமொழி.