மேச்சேரி அருகே, குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை, ஆத்திரத்தில் கோடாரியால் வெட்டிக்கொன்ற தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள வெள்ளார் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி பசுவதி. இவர்களுக்கு ஆஞ்சிகுமார் (27), குமரேசன் (24) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இருவரும் கூலித்தொழிலாளிகள். இவர்களுடைய தாயார் பசுவதி, வீட்டுச்செலவுகள் போக எஞ்சியிருக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக உண்டியலில் சேர்த்து வைத்து வந்துள்ளார். அந்தப் பணத்தை குமரேசன் எடுத்து செலவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 3ம் தேதி) வீட்டுக்கு மது போதையில் வந்த ஆஞ்சிகுமார், தன் தம்பியிடம் உண்டியல் பணத்தை எடுத்தது தொடர்பாக விசாரித்துள்ளார். அதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அவர்களுக்குள் கைகலப்பாக மாறியது. ஆத்திரம் அடைந்த குமரேசன், அருகில் இருந்த கோடாரியை எடுத்து அண்ணன் என்றும் பாராமல் ஆஞ்சிகுமாரை வெட்டினார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அதற்குள் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்ததால் குமரேசன் தப்பி ஓடிவிட்டார்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஆஞ்சிகுமாரை மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர், திங்கள்கிழமை (ஏப். 4) உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மேச்சேரி காவல்நிலைய காவல்துறையினர், குமரேசனை கைது செய்தனர்.
உடன் பிறந்த சகோதரர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு, கொலையில் முடிந்த சம்பவம் வெள்ளார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.