நெல்லையின் டவுன் காந்திமதி அம்மனின் ஆலயம் எதிரே உள்ளது இருட்டுக் கடை அல்வா. சுவை, பாரம்பரியம் குறையாத சரக்கின் குவாலிட்டி காரணமாக அல்வா கிண்டும் உலகில் பெயரெடுத்தது டவுன் இருட்டுக் கடை அல்வா. சின்னஞ்சிறிய மரக்கடை சைஸ் அளவு கொண்ட கடையில், காலப்போக்கில் குன்றாத சுவை, தரம் காரணமாகப் புகழ்பெற்ற இந்தக் கடையின் அல்வா உலக அளவில் பெயர் வாங்கியிருக்கிறது. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் தற்போது விண்ணுக்குப் போன நிலையில், தங்களது அல்வா கடையின் புராதனத்தை வெளிப்படுத்தும் வகையில் கடையை நவீனமாக்கினால் கஸ்டமர்களுக்கும், வரும் வெளிமாவட்ட, வெளிமாநில சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு அடையாளம் தெரியாமல் போய்விடும். வியாபாரம் குறைந்துவிடும் என்பதால் அல்வா கடையின் பழமையான சைஸை மாற்றாமல் இன்றளவும் தொடர்கின்றனர். மேலும் சுமார் 80 வருடங்களுக்கு முன்பு 20 வாட்ஸ் பல்ப்பின் வெளிச்சத்திலேயே அல்வா வியாபாரம் செய்த இதன் நிறுவனர் இன்றளவும் 20 வாட்ஸ் பல்பின் வெளிச்சத்தின் அளவை மிகப்பெரிய சைஸ் அளவுக்குக் கூட மாற்றவில்லை. அதனாலேயே இருட்டுக்கடை அல்வா என்ற உலகப் பாரம்பரியப் பெயர் இன்றளவும் தொடர்கிறது.
அனுதினமும் மாலை மூன்று மணிக்குத் தொடங்கும் அல்வா வியாபாரம் கூடிப்போனால் 7 அல்லது 8 மணிக்குள்ளாகவே விற்றுத் தீர்ந்துவிடும். மாலையில் அல்வா வாங்குவதற்கே மலைக்கவைக்கும் அளவுக்கு க்யூ நீண்டிருப்பது இருட்டுக்கடையின் மகிமை என்கிறார்கள். 5, 10 கிலோ என்று ஆரம்பித்து தற்போதைய அளவில் அன்றாடம் நூற்றுக்கணக்கான கிலோ விற்பனை வரை நீண்டிருக்கிறது.
இருட்டுக் கடையை உருவாக்கியவர்களின் வரலாறு இதுதான், என்பதை இதன் தொன்மைப் பற்றி அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
பலவகை இனிப்புகள் தயாரிப்பின் சுவையின் தரத்தால் பெயர் பெற்றவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த லாலா வம்சம். பிழைப்பின் பொருட்டு 80 வருடங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தின் சொக்கம்பட்டி ஜமீன் வம்சத்திற்கு இனிப்பு சமையல் செய்யும் பொருட்டு வந்தவர்கள். அதன் மூலம் பெயர் பெற்றனர். அந்த வம்சத்தில் வந்த பிஜிலிசிங் என்பவர் 80 வருடங்களுக்கு முன்பே, நெல்லைப் பகுதியின் மத்திய எக்ஸைஸ் துறையில் அதிகாரியாகப் பணியிலிருந்தவர். இருப்பினும் தங்கள் குடும்ப பாரம்பரியம் போய்விடாமலிருப்பதற்காக, பிஜிலிசிங் அப்போதைய நிலையில், அரசின் அனுமதி பெற்று நெல்லையில் சிறிய அளவில் (தற்போது வரை அதே சைஸ்) லாலா கடை அமைத்து வியாபாரத்தை 20 வாட்ஸ் (அப்போது அந்த லைட் தான் பிரபலம்) வெளிச்சத்தில் தொடங்கினார். வியாபாரம் வருமானம் வசதிகள் பெருகினாலும் தனது கடையின் பாரம்பரியத்தையும் பண்பையும் வெளிச்சத்தின் தன்மையையும் அவர் கைவிடவில்லை.
தனது வம்சாவழிகுல தெய்வமான கல்லகநாடி அம்மனின் படத்தை மட்டுமே தனது கடையில் மாட்டியிருப்பார். இந்த ஆலயம் சொக்கம்பட்டி அருகே கிருஷ்ணாபுரக் காட்டில் உள்ளது.
பிஜிலிசிங்கிற்கு வாரிசுகளில்லாமல் போனதால் அவரது மறைவிற்குப் பின்பு அவரது மருமகனான ஹரிசிங், மற்றும் அவர் மகனும் இருட்டுக் கடையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தங்களது கடையின் குவாலிட்டி பாரம்பரியம் கெடாமலிருக்க, நெல்லைன்னா அல்வாதான் என மனிதர்களுக்கு நினைவு வருகிறதைப்போல, மற்றவர்கள் தங்கள் கடைப் பெயரை டூப்ளிகேட் செய்துவிடக்கூடாது என்பதற்காக இருட்டுக் கடை அல்வா என்ற பெயரை டிரேட் மார்க்காக ரிஜிஸ்டர் செய்துள்ளனர்.
இந்த நிலையில், கொடூரக் கரோனா வைரஸ், அந்தக் கடையிலும் புகுந்துவிட்டது. தொற்று கடையின் இரண்டு அதிபர்களுக்கும் பரவ, சோதனையில் கரோனா பாசிட்டிவ் என்று வர, உடனே இருவரும் நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கிருமி தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் அல்வா கடையிலும் அவரது மற்றொரு கடையிலும் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன. தயார் செய்யப்பட்ட அல்வா மூலம் தொற்றுப் பரவலைத் தடுக்க அதுவும் அழிக்கப்பட்டுள்ளதாம். தனது கடை, இந்த அளவுக்குப் போன மன அழுத்தம் காரணமாக இன்று மதியம் மருத்துவமனையிலே தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் பெரியவர்.
சோதனையில் கரோனா பாஸிட்டிவ் என கண்டறியப்பட்டதால் தொற்றைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார் முறையான விசாரணை நடக்கும் என்கிறார் மாநகர டி.சி.யான சரவணன். அல்வா உலகை ஆண்ட இரண்டு தலைமுறைப் பாரம்பரியம் சோகத்தில் முடிந்திருக்கிறது.