நெல்லை மாவட்டத்தின் தாழையூத்து பக்கமுள்ள பாலாமடையைச் சேர்ந்தவர் ஆத்தி (58). இவரது மனைவி பாப்பா. இந்தத் தம்பதியருக்கு 3 மகள்கள் 1 மகன் உள்ளனர். இரண்டாவது மகள் மணிமேகலைக்குத் திருமணமாகி கணவன் வேல்முருகனுடன் துபாயில் வசித்து வந்தார். வேல்முருகன் அங்குள்ள கெமிக்கல் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்திருக்கிறார். இவர் ஆலையில் பணியிலிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். அவரது உடலை இந்தியாவிற்கு நல்லடக்கம் பொருட்டுக் கொண்டு வர முடியாமல் தவித்த மணிமேகலை தன் நிலைபற்றி, ஆதரவற்ற நிலை பற்றியும் உருக்கமாகச் சமூக வலைத்தளங்களில் கண்ணீரோடு பதிவு செய்திருந்தார்.
இந்தப் பதிவுகளோடு மணிமேகலையின் பெற்றோர் நெல்லை மாவட்ட ஆதிதிராவிட நலக் கண்காணிப்புக் குழு வழக்கறிஞர் கலைச் செல்வன், ஆகியோர் 15 தினங்களுக்கு முன்பு நெல்லை ஆட்சியர் ஷில்பாவைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் துபாயில் தவிக்கும் தன் மகளையும், மருமகனின் உடலையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்திருந்தனர். அதையடுத்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகங்களின் நடவடிக்கை காரணமாக வேல்முருகனின் உடல் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு அவரது சொந்த கிராமமான தூத்துக்குடி மாவட்டத்தின் கொடியங்குளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அபலை பெண் வடித்த கண்ணீர் வீண் போகவில்லை.