சேலம் பெண் பியூட்டிஷியன் கொல்லப்பட்டது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன், அதிமுக பிரமுகர். இவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் பெங்களூருவைச் சேர்ந்த தேஜ் மண்டல் (26) என்ற இளம்பெண் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
மாற்றுத்திறனாளியான இவர், சேலத்தில் அழகாபுரம், பள்ளப்பட்டி, சங்கர் நகர் ஆகிய இடங்களில் அழகு நிலையம் மற்றும் மசாஜ் மையம் நடத்திவந்தார். இவரிடம் வேலை செய்துவந்த இரண்டு பெண்கள், ஒரு ஆண் ஆகிய மூன்று ஊழியர்களையும், தான் வசித்துவந்த அதே குடியிருப்பில் பக்கத்து வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் படுக்கை அறையில் இருந்த சிமெண்ட் அலமாரியில் ஒரு சூட்கேஸ் பெட்டிக்குள் தேஜ் மண்டல் மர்மமான முறையில் கொல்லப்பட்டு, சடலமாகக் கிடத்தப்பட்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர், தேஜ் மண்டலின் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
உடற்கூறாய்வில், தேஜ் மண்டலை மூக்கு, வாய் பகுதியில் துணியால் அழுத்தி மூச்சுத்திணற வைத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையே, அவருடைய அழகு நிலையத்தில் வேலை செய்துவந்த நான்கு பேரில் நிஷி, லப்லூ ஆகிய இரு பெண்களும் வங்கதேச நாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என தெரியவந்துள்ளதை அடுத்து, தனிப்பபடையினர் வங்கதேசம் விரைந்துள்ளனர். மேலும், இரு பெண்களும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைத் தேடி இரண்டு தனிப்படை காவல்துறையினர் மும்பைக்கும், பெங்களூருவுக்கும் விரைந்துள்ளனர்.
கொலையாளிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகாமல் இருக்க, கேமராவின் கோணத்தை வேறு பக்கமாக திருப்பிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த வேலையை லப்லூ என்ற பெண்தான் செய்துள்ளார். அதனால் லப்லூவும், அவருடன் தங்கியிருந்த நிஷியும்தான் தேஜ் மண்டலை கொலை செய்திருக்க வேண்டும் என சந்தேகிக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, தேத் மண்டல் செல்ஃபோனை எடுக்கவில்லை என அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் நடேசனுக்கு தகவல் அளித்த பிரதாப் என்ற இளைஞரையும் பிடித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த பிரதாப், சென்னையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். அவர், சென்னையில் உள்ள ஒரு மசாஜ் மையத்திற்குச் சென்றபோது அங்கு வைத்துதான் முதன்முதலில் தேஜ் மண்டலை சந்தித்துள்ளார். அந்த மையத்தில் வேலை செய்துவந்த தேஜ் மண்டல் அளித்த சேவை, பிரதாப்புக்கு பிடித்துப் போகவே, நாளடைவில் அவருடன் செல்ஃபோன் மூலம் தொடர்புகொண்டு நெருக்கத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். மேலும், அவர்களுக்குள் உறவு இருந்துவந்துள்ளது.
இதையடுத்து தேஜ் மண்டலை சேலத்திற்கு அழைத்து வந்த பிரதாப், இருவரும் சேர்ந்து மசாஜ் மையங்களைத் தொடங்கியுள்ளனர். உண்மையில் இவர்கள், மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழிலையே நடத்திவந்திருப்பது தெரியவந்துள்ளது. முதலில் சேலம் அழகாபுரத்தில் மசாஜ் மையத்தைத் தொடங்கியுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவர் தேஜ் மண்டலிடம் மாமூல் கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார். அதன்பிறகு அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு, பள்ளப்பட்டி, சங்கர் நகர் ஆகிய இடங்களில் மசாஜ் மையங்களைத் தொடங்கியுள்ளனர்.
இதில் பள்ளப்பட்டி மசாஜ் மையத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை பிரதாப்பும், சங்கர் நகர் மையத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை தேஜ் மண்டலும் பங்கிட்டு எடுத்துக்கொண்டுள்ளனர். எல்லாம் நல்லபடியாகச் சென்ற நிலையில்தான், கடந்த மாதம் பள்ளப்பட்டி அங்கம்மாள் காலனியில் உள்ள மசாஜ் மையத்தில் மாநகரக் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டனர். பிரதாப் மீதும் வழக்குப் பதிவுசெய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார்.
அதேநேரம், சங்கர் நகரில் உள்ள மசாஜ் மையத்திலும் காவல்துறையினர் சோதனை செய்து, அங்கிருந்தும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டனர். ஒரு பெண்ணை மட்டும் கைது செய்தனர். ஏனோ அப்போது தேஜ் மண்டலை மட்டும் கைது செய்யாமல் விட்டுவிட்டனர்.
இந்நிலையில்தான், கையில் தாராள பணப்புழக்கத்துடன் இருந்துவந்த தேஜ் மண்டலிடம் அவருடைய ஊழியர்கள் நிஷி, லப்லூ ஆகிய இருவரும் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். அந்தப் பணத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்ததால், தேஜ் மண்டல் அவர்களிடம் பணத்தைக் கேட்டு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார். அப்போதுதான் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
சங்கர் நகர் மசாஜ் மையத்திற்கு ஆண், பெண்களை அழைத்துவரும் முக்கிய புரோக்கராக லப்லூ செயல்பட்டுவந்துள்ளார். அதனால் அந்த மையத்தில் எந்தளவுக்கு வருமானம் வருகிறது என்ற விவரம் எல்லாம் நிஷிக்கும், லப்லூவுக்கும் அத்துப்படியாகத் தெரியும் என்கிறது காவல்துறை. இது ஒருபுறம் இருக்க, சங்கர் நகர் மசாஜ் மையத்திலிருந்து கைது செய்யப்பட்ட ஒரு பெண், தற்போது ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இவர் ஜாமீனில் வெளியே வந்த நேரத்தில் அவருடைய தாயார் இறந்துள்ளார். தாயாரின் இறுதிச் சடங்கு செலவுகளுக்காக தேஜ் மண்டலிடம் பண உதவி கேட்டுள்ளார். அப்போது தேஜ் மண்டல், மசாஜ் மைய சோதனையின்போது தன்னை கைது செய்யாமல் இருக்க, காவல்துறைக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவழித்துவிட்டேன். அதனால் இப்போது பணம் இல்லை என்று கூறி அவரை அனுப்பிவிட்டாராம்.
அந்த நேரத்தில் போலீஸ் அதிகாரிகள் இருவர் தேஜ் மண்டலை ரகசியமாக சந்தித்துவிட்டதும் இப்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா, பாலியல் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மசாஜ் செண்டர்களில் அதிரடி சோதனை நடத்திய நிலையில், முக்கிய குற்றவாளியைக் கைது செய்யாமல் இருக்க போலீசார் லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேஜ் மண்டல் கொலை வழக்கு குறித்து தனிப்படை காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.