
ஒவ்வொரு வருடமும் பருவநிலை மாற்றத்தின் பொழுது புதுப்புது வைரஸ் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் நம் உடலை தாக்கக்கூடும்.. அவ்வாறு பரவக்கூடிய நோய்களின் வீரியம் அதிகமானால் அதிக அளவு மக்களை பாதிக்கும். அதற்கான சமீபத்திய உதாரணம் சீனாவில் தோன்றி உலகையே தாக்கிய கொரோனா வைரஸ். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து மக்களையும் அந்த வைரஸ் தொற்று தாக்கி பாதிப்புக்கு உள்ளாகியது. தற்பொழுது கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் புதுப்புது வைரஸ் கிருமிகள் மற்றும் பாக்டீரியா கிருமிகள் அதிக அளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் கோவன்ஸ் நுரையீரல் சிகிச்சை மையத்தின் தலைமை மருத்துவர் மருத்துவர் பால. கலைக்கோவன் இதுகுறித்து கூறுகையில், 'குறிப்பாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ,சிறுநீரக நோய் உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதற்கு பருவநிலை மாற்றம் ஒரு காரணம் என்றாலும் காற்று மாசு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது. ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் (Air Quality Index)அதாவது காற்றின் சுத்தத்தன்மை வழக்கமாக 10 யூனிட் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் இரண்டு மாதங்களாக கடலூரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் காற்று மாசு தன்மை 170 யூனிட்டுக்கும் அதிகமாக இருந்தது.
உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக கருதப்படும் இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இந்த ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் சமீபத்தில் 800 யூனிட்டுகளை தொட்டது. தலைநகர் டெல்லியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நுரையீரல் பாதிப்பு காணப்பட்டு வருகிறது. கோடைகால விடுமுறை கேள்விப்பட்டிருப்போம் ,குளிர்கால விடுமுறை கேள்விப்பட்டிருப்போம் இப்பொழுது டெல்லியில் காற்று மாசுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதுதான் வேதனை. இது டெல்லியில் மட்டும் ஏற்படும் பிரச்சனை அல்ல.

சமீபத்தில் கடலூர் மாவட்டத்திற்கு மழை அதிகளவு பெய்யவில்லை என்றாலும் வெள்ளத்தால் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற ஊர்களில் இருந்து தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து கடலூர் வழியாக கடலில் கலந்ததை நாம் நன்கு அறிவோம். இவ்வாறு பல மாவட்டங்களில் உள்ள தண்ணீர் கடலூருக்கு வந்து கலப்பதால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நச்சு கிருமிகள் மற்றும் வைரஸ்களும் கடலூர் மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
குறிப்பாக வெள்ளம் ஏற்பட்ட கிராமங்களில் உள்ள அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் நுரையீரல் தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்டனர். இந்த ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 10 நாட்களாக நுரையீரல் தொற்று அதிக அளவில் காணப்படுகிறது. புறநோயாளிகள் பிரிவு மற்றும் உள்நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனால் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களும் நோய்த்தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர்.
அதிவேகமாக பரவும் இந்த நோய் தொற்றிலிருந்து எவ்வாறு நாம் பாதுகாத்துக் கொள்வது என்பதை அறிந்து கொள்வோம். இவ்வாறு பருவநிலை மாற்றம் ஏற்படும் பொழுது அல்லது வெள்ளப்பெருக்கின் பொழுது அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் ,காலில் புண் உள்ளவர்கள் அசுத்தமான நீர் காலில் படாதவாறு பாதுகாத்து கொள்ள வேண்டும்... அரசாங்கம் தருகின்ற வெள்ள அபாய எச்சரிக்கைகளை கூர்மையாக கவனித்து அதற்கு ஏற்றவாறு பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்து கொள்வது சாலச்சிறந்தது.
அவ்வாறு செய்ய இயலாதவர்கள் தீயணைப்புத் துறை ,காவல்துறை ,உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டு தங்கள் நோய் தன்மையை எடுத்துக் கூறி முன்னுரிமை பெற்று இடமாற்றம் செய்துகொள்ள வேண்டும்.
கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோய் தொற்று உள்ள பெரியவர்கள் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் நல்லது... எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை மட்டுமே இந்த பருவநிலை மாற்றம் உள்ள காலங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும் அஜீரணக் கோளாறு ஏற்பட்டுவிட்டால் இந்த நுரையீரல் தொற்று அதிகமாக வாய்ப்பு உள்ளது. உணவுகளில் புளிப்புத் தன்மையை குறைத்துக் கொள்வது நல்லது.
சிறுநீரக பிரச்சனைக்காக டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகள் வீட்டை விட்டு வெளியேறும் பொழுது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.டயாலிசிஸ் சென்டர்களிலும் முக கவசம் அணிந்து கொண்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி நுரையீரல் தொற்று ஏற்பட்டு விட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் ,தலைவலி ,உடல் சோர்வு, பசியின்மை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம். தேவைப்பட்டால் நுரையீரலுக்கு ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்ப்பதும் நல்லது.
நோய் அறிகுறி உள்ள குழந்தைகளை பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்புவதை தவிர்க்க வேண்டும். தேர்வுகள் இருந்தாலும் பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துக் கூறி மருத்துவரின் பரிந்துரை கடிதத்தை கொடுத்தல் நல்லது. கொரோனா காலங்களில் நாம் எவ்வாறு எச்சரிக்கை விழிப்புணர்வுடன் இருந்தமோ அதே போன்று தற்போது வரும் இந்த பருவநிலை நோய்களிடம் இருந்து விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது' என தெரிவித்துள்ளார்.