கடந்த 2022ஆம் ஆண்டு கால்பந்து உலக கோப்பை போட்டி கத்தாரில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டம் 18.12.2022 அன்று நடந்த நிலையில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதின. மெஸ்ஸி தலைமையில் அர்ஜென்டினா அணியும் எம்பாப்பே தலைமையில் பிரான்ஸ் அணியினரும் களம் கண்டனர். இந்தப் போட்டி ஆரம்பத்தில் பொறுமையாக சென்று போகப் போக வேகமெடுத்து இறுதியில் பரபரப்புடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த இறுதிப் போட்டி இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளிலேயே ஒரு எவர் கிரீன் போட்டியாக பார்க்கப்படுகிறது. இதில் அர்ஜென்டினா த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்றாவது உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றது.
இந்த வெற்றியை அர்ஜெண்டினா மக்கள் வெகு விமர்சியாக கொண்டாடினர். அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அய்ரஸ் நகரில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு கொண்டாடிய நிலையில் இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இந்த பிரம்மாண்ட வெற்றியை நினைவு கூறும் வகையில் இறுதி போட்டி நடந்த அதே நாளில் நேற்று(18.12.2024) ஃபிஃபா அமைப்பு அவர்களது ஃபேஸ்புக் பக்கத்தில் நிறைய ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டது.
அதில் ஒரு வீடியோவில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி மற்றும் அணி வீரர்கள் இறுதி போட்டியில் எப்படி விளையாடினார்கள் என்பதும் வெற்றி பெற்றவுடன் எந்தளவிற்கு எமோஷ்னல் ஆனார்கள் என்பதும் இடம்பெற்றிருந்தது. அவர்களது எமோஷ்னலான தருணத்தை கமல் - இளையராஜா கூட்டணியில் வெளியான ‘கண்மனி அன்போடு...’ பாடலை வைத்து எடிட் செய்யப்பட்டிருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தமிழ் ஃபுட்பால் ரசிகர்களாலும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.