ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்துள்ள தர்பார் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (09.01.2020) வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனு, நீதிபதி ஜெயசந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது லைக்கா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம், சட்டவிரோதமாக இணையத்தில் தர்பார் படத்தை வெளியிடுவதால் மனுதாரருக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே, இணையத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து, தர்பார் திரைப்படத்தை ஆயிரத்து 370 இணையதளங்களில் வெளியிட தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.