
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், ராப்பூசல் கிராமத்தில் ஒரு வீட்டில் விலை குறைவான புதுச்சேரி மதுப் பாட்டில்கள் மொத்தமாக கொண்டு வந்து பதுக்கி வைத்திருப்பதாக திருச்சி மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து திருச்சி மத்திய நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் ஜெ.ராமன் தலைமையிலான குழுவினர் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் (கடை எண் 6684) பாரில் பாண்டிச்சேரி மது டாஸ்மாக் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதை கண்டறிந்து அந்த பாருக்கு எங்கிருந்து மதுபாட்டில்கள் வருகிறது என்பதை தனிக்குழு கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மதுபாட்டில்கள் கடத்தி வந்த போது போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பிச் சென்றுவிட்டனர்.
அதனையடுத்து சிலரது செல்போன் எண்களை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் பாண்டிச்சேரியில் இருந்து டி.என் 51 ஏ.எம்.4736 பதிவு எண் கொண்ட அசோக் லேலண்ட் முழுமையாக கூண்டு அமைக்கப்பட்ட லாரியில் மீன் பெட்டிகளை அடுக்கி அதற்குள் சாக்கு பைகளில் மதுப்பாட்டில்களை வைத்து கடத்தி வருவதை உறுதிசெய்த திருச்சி மத்திய நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் ராமன் தலைமையிலான குழுவினர் அந்த லாரி எங்கே செல்கிறது என்பதை பின்னாலேயே கண்காணித்து வந்துள்ளனர்.

பாண்டிச்சேரியில் புறப்பட்ட கூண்டு லாரி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகில் உள்ள ராப்பூசல் கிராமத்தில் பேவரன் பண்ணை என்ற இடத்தில் உள்ள முத்துவீரன் மகன் ரவி (40) என்பவர் வீட்டில் நிறுத்தி மதுப்பாட்டில்களை இறக்கியுள்ளனர். (இந்த ரவி கீரனூரில் 6684 டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருபவர்) அங்கு வந்த திருச்சி மத்திய நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் ராமன் தலைமையிலான குழுவினர் லாரி மற்றும் லாரியில் இருந்து ரவி வீட்டில் இறக்கப்பட்ட 1800 புல் (750 மி) மதுப்பாட்டில்களை கைப்பற்றியதுடன் அங்கிருந்த ரவியின் மைத்துனர் தெண்ணதிரையான்பட்டி மணி மகன் குமரேசன் (24), லாரி ஓட்டுநர் காரைக்கால், டி.ஆர்.பட்டிணம், பூபதி கோட்டை, அபிராமியம்மன் கோவில் மேலத் தெரு ஜோதி மகன் சோமசுந்தரம் (34), லாரி கிளீனர் காரைக்கால் டி.ஆர்.பட்டிணம், போலகம், காளியம்மன் கோயில் தெரு அன்பழகன் மகன் அரவிந்தராஜ் (28) ஆகிய 3 பேரையும் பிடித்தனர்.

போலீசார் வந்த தகவலறிந்து பார் நடத்துநர் ரவி மற்றும் பாண்டிச்சேரி மதுப்பாட்டில்களை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்யும் புரோக்கரான காரைக்காலை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் தங்கள் செல்போன்களை சுவிட்ஸ் ஆஃப் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட பாண்டிச்சேரி மதுபானங்கள் ஏற்றி வந்த லாரி, பிடிபட்ட குமரேசன், சோமசுந்தரம், அரவிந்தராஜ் ஆகிய 3 பேரையும் மத்திய நண்ணறிவுப் போலீசார் புதுக்கோட்டை மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்த போலீசார் லாரி மற்றும் மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிய பார் நடத்தும் ராப்பூசல் பேவரான் பண்ணை முத்துவீரன் மகன் ரவி மற்றும் மதுப்பாட்டிகளை கொண்டு வந்த புரோக்கர் சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். பிடிபட்ட பாண்டிச்சேரி மது பானங்களின் மதிப்பு ரூ.4.50 லட்சம் என கூறப்படுகிறது.
கீரனூரில் பல மாதங்களாக பாண்டிச்சேரியில் விலை குறைவாக வாங்கி மதுவை தான் அதிக விலைக்கு விற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள பார்களில் சோதனை செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர் என்கின்றனர் போலீசார்.