சென்னை புதுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்தது. ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி அசீம்ஷா விழாவிற்குத் தலைமை ஏற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் ஜபார், கல்லூரி செயலாளர் கபீர் அகமது, கல்லூரி டிரசரர் இலியாஸ் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றிய இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் ”பொதுவாக கல்லூரி விழாவில் அரசியல் பேசக்கூடாது என்று நினைப்பவன் நான். ஆனாலும், இன்று இருக்கும் நிலைமையை என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. நம் நாட்டுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்த தியாகிகள், இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று பெருமிதம் பொங்க அறிவித்தார்கள். இதைத்தான் நம் அரசியல் சட்டமும் சொல்கிறது. ஆனால் இன்றைய மத்திய அரசு இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடந்துகொள்வதோடு, மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசியல் சட்டம், இங்கு அனைவரும் சமம் என்றுதான் சொல்கிறது. சாதி, மத, பாலின அடிப்படையில் கூட நாம் வேறுபாட்டைக் கடைபிடிக்கக்கூடாது என்று அது அறிவுறுத்துகிறது. ஆனால் சனாதன தர்மமும் மனு தர்மமும், இதற்கு எதிராக இன்று கோலோச்சுவதைப் பார்க்கமுடிகிறது. இன்று மத்திய அரசு மத சார்பின்மைக்கு எதிராகக் செயல்படுவதற்கு மிகப்பெரிய உதாரணம், பாபர் மசூதி விவகாரத்தில் அது நடந்துகொண்ட முறையாகும்.
உச்சநீதிமன்றத்தை விமர்சிக்கக் கூடாது என்றாலும், அது பாபர் மசூதி விவகாரத்தில் கொடுத்திருக்கும் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. பாபர் மசூதியை இடித்தது தவறு என்று சொல்லிவிட்டு, அப்படி இடித்துக் குற்றம் செய்தவர்களுக்குப் பரிசு கொடுப்பதுபோல் அந்த இடத்தை அவர்களுக்கே கொடுத்திருக்கிறது. இது எப்படி சரியானதாகும்?
அரசியலில் மதத்தைக் கலப்பது தவறானது. ஆனால் இன்று மதத்தை வைத்தே மத்திய அரசு அரசியல் செய்கிறது. இது மிகப்பெரிய அத்துமீறல்” என்றார் காட்டமாக.