Skip to main content

தொடரும் அவலம் - தண்ணீர் தேடி அலைந்த புள்ளிமான் நாய் கடித்து பலி

Published on 19/06/2019 | Edited on 19/06/2019

 

குடிதண்ணீர் கிடைக்காமல் மக்கள் மட்டுமின்றி கால்நடைகள், காடுகளில் வாழும் வனவிலங்குகள் என அனைத்து உயிரினங்களும் அவதிப்பட்டு வருகிறது. தண்ணீரை தேடி அலையும் விலங்குகளை மற்ற விலங்குகள் வேட்டையாடி கொன்றுவிடும் சம்பவங்களும் தொடர்கிறது.  15 நாட்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 புள்ளிமான்கள் நாய் கடித்து பலியாகி உள்ளது.

d


புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் முதல் வம்பன் வரை வனத்துறைக்கு சொந்தமான முந்திரி மற்றும் தைலமரக்காடுகள் உள்ளது. தைல மரங்கள் அதிகமாக உள்ள காட்டில் புல் பூண்டுகள் கூட முளைப்பதில்லை. அனல் அதிகமாக உள்ளது. 


இந்த காடுகளில் மான், மயில், முயல், குரங்கு, பறவைகள் ஏராளம் உள்ளது. ஆனால் அவற்றின் தேவைக்கு காடுகளுக்குள் தண்ணீர் வசதி இல்லை. காடுகளில் குட்டைகள் அமைத்து தண்ணீரை தேக்கி வைத்து வன விலங்குகளுக்கு உதவி செய்த காலம் மாறிவிட்டதால் கவனத்துறை காடுகளில் வசிக்கும் விலங்குகள் பறவைகள் தண்ணீரை தேடி விவசாய ஆழ்குழாய் கிணறுகளை நோக்கி நீண்ட தூரங்கள் செல்கிறது. 

 

விலங்குகள் செல்லும் வழியில் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதால்  நாய்கள் ஏராளமாக நிற்கும். அந்த நேரங்களில் செல்லும் மான், மயில்களை நாய்கள் கடித்து குதறிவிடுகிறது. இப்படித்தான் இன்று புதன் கிழமை தண்ணீருக்காக காட்டைவிட்டு வெளியே வந்த பெரிய புள்ளி மானை நாய்கள் கடித்து குதறி கொன்றுவிட்டது.
   

இதே போல கடந்த 15 நாட்களுக்கு முன்பு கீரமங்கலம் சேந்தன்குடியில் வனத்துறைக்கு சொந்தமான  முந்திரிக் காட்டில் இருந்து தண்ணீர் குடிக்க ஒரு விவசாய ஆழ்குழாய் கிணறுக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு காட்டுக்கு திரும்பும் போது ஒரு நாய் புள்ளி மானை கடித்து குதறியது. அந்த மான் சிறிது நேரத்தில் துடிதுடத்து இறந்தது. பிறகு வனத்துறையினர் மானை மீட்டுச் சென்றனர். இப்படி தண்ணீர் தேடிச் செல்லும் மான்கள் நாய்களுக்கு பலியாகும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது.


இது குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறும் போது.. புதுக்கோட்டை மாவட்டத்தில் வனத்துறைக்கு அதிகமான நிலங்கள் உள்ளது. அதில் தண்ணீரை உறிஞ்சி வெப்பத்தை வெளிப்படுத்தும் தைலமரக்காடுகளே அதிகம். முந்திரி காடும் உள்ளது. அந்த காடுகளில் வாழும் வன விலங்குகளின் தேவைக்கு தண்ணீர் வசதி எங்கேயும் இல்லை. அதனால் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்கு செல்லும் மான் போன்ற வனவிலங்குகள் நாய்களாலும் வேட்டைக்காரர்களாலும் இறையாக்கப்படுகிறது. இந்த அவல நிலையை போக்கவில்லை என்றால் வனவிலங்குகளை பாடப்புத்தகங்களில் மட்டுமே காணமுடியும். அதனால் தமிழ்நாடு வனத்துறை வனவிலங்குகள், பறவைகளை பாதுகாக்க காடுகளில் தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் என்றனர்.   


காகிதங்கில் மட்டும் தண்ணீர் தொட்டிகளை அமைக்காமல் உண்மையாகவே தண்ணீர் தொட்டிகளை அமைத்தால் குறைந்து வரும் வனவிலங்குகளை காப்பாற்றலாம்.

சார்ந்த செய்திகள்