ராமநாதபுரம் மாவட்டம், குளத்தூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் ‘தொல்லியல் கருத்தரங்கம்’ நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு தலைமை ஆசிரியர் ஹரிஹர கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமூக அறிவியல் ஆசிரியர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். பத்தாம் வகுப்பு மாணவர் விஷ்வா வரவேற்றார். மன்றச் செயலரும், கணித ஆசிரியருமான சி.பால்துரை, ஊரின் பழமையை பாதுகாப்பதில் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றிக் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளரும், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியருமான வே.ராஜகுரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, “ஒவ்வொரு ஊரிலும் மக்கள் வாழ்ந்து அழிந்துபோன தொன்மையான மேடுகள், இடங்கள் இருக்கும். அதேபோல் குளம், கண்மாய், கோயில் போன்ற இடங்களில் பழமையான கல்வெட்டுகள் காணப்படும். இத்தகைய தொல்லியல் தொடர்புகளை பள்ளி மாணவர்கள் கண்டறிந்து தங்கள் ஊரின் பழமையை அறிய உதவவேண்டும்” என கேட்டுக் கொண்டார். அகழாய்வு, மேற்பரப்பாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள், கல்வெட்டுகளின் படங்கள் மூலம் தொல்லியல் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார். ஒன்பதாம் வகுப்பு மாணவர் ரித்திக் நன்றி கூறினார்.