திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக உறுப்பினரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஆத்தூர் தொகுதியில் வருடம் தோறும் திமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் புகைப்படத்துடன் கூடிய காலண்டர்களை வழங்கி வருகிறார். திமுக தொண்டர்கள் வீடுகள் மற்றும் ஹோட்டல்கள், டீ கடைகளில் திமுக காலண்டர் இருப்பது வழக்கமாகிவிட்டது.
இந்த நிலையில் தற்போது, 2025ம் வருடத்திற்கான காலண்டர்களை விநியோகம் செய்து வருகின்றனர். ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஐ.பெரியசாமி, கிழக்கு மாவட்ட திமுக செயலாயர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோரின் படங்கள் பொறித்த தினசரி நாட்காட்டிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஊராட்சி வாரியாக காலண்டர்கள் எடுத்துச்செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் வணி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஒன்றிய குழு உறுப்பினர் வண்ணம்பட்டி காணிக்கை சாமி கூறுகையில், ஆத்தூர் தொகுதி முழுவதும் எங்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி 20 வருடங்களுக்கு மேலாக தினசரி காலண்டர்களை வழங்கி வருகிறார். தினமும் நாங்கள் காலண்டரை பார்க்கும் போது நாங்கள் திமுககாரர்கள் என்பதில் பெருமையாக இருக்கிறது” என்றார்.
ஆத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செல்வி காங்கேயன் கூறுகையில், எங்கள் தொகுதி அமைச்சர் ஐ.பெரியசாமி வருடந்தோறும் வழங்கி வரும் தினசரி காலண்டர்களை எங்கள் வீரக்கல் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் செல்கின்றனர். இந்த காலண்டரை எங்கள் வீட்டில் வைத்திருக்கும் போது திமுக உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருப்பது போல் எங்களுக்கு பெருமையாக உள்ளது” என்றார்.
1989ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை 36 ஆண்டுகளாக ஆத்தூர் தொகுதியில் திமுகவின் கோட்டையாக வைத்திருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வீட்டிற்கு வருடந்தோறும் தினசரி காலண்டரை வழங்கி வருவதற்கு திமுக தொண்டர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.