நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது,பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாபாசாகேப் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
அமித்ஷா பேசிய கருத்துக்கு எதிராக, கர்நாடகா காங்கிரஸ் உறுப்பினர்கள் கர்நாடகா மாநில சட்ட மேலவையில் கண்டனம் தெரிவித்து அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டத்தின் போது, பா.ஜ.க எம்.எல்.சி சி.டி.ரவிக்கும், கர்நாடகா அமைச்சர் லட்சும் ஹெப்பால்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கு எதிராக சி.டி.ரவி தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், சி.டி.ரவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டப்பேரவை சபாநாயகரிடம், காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சி.டி.ரவியை கடந்த 19ஆம் தேதி இரவு கைது செய்தனர். இதனை தொடர்ந்து, சி.டி.ரவிக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், கர்நாடகா அமைச்சர் லட்சுமி ஹெப்பால் இன்று (23-12-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சி.டி.ரவியை மன்னிக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, எனக்கு நடந்த அநீதியை அவரது கவனத்துக்கு கொண்டு வருவேன். நான் அதிர்ச்சியடைந்ததால், இது குறித்து இரண்டு நாட்கள் நான் அமைதியாக இருந்தேன். நான் யாரிடமும் அப்படி ஒரு விஷயத்தை கேட்டதில்லை. அநீதிக்கு எதிராக 26 ஆண்டுகள் போராடி இந்த நிலைக்கு வந்துள்ளேன்.
ஒரு பெண்ணை அவமரியாதை செய்த ஒருவரை ஆதரித்ததற்காக எனது பஞ்சமசாலி லிங்காயத் சமூகத்தின் தலைவர்களான பசங்கவுடா பாட்டீல் யத்னால் மற்றும் அரவிந்த் பெல்லாட் ஆகியோரை நினைத்து நான் வேதனையடைகிறேன். அரசியலுக்காகவும், தங்களது கட்சிக்காகவும் இப்படி செய்கிறார்கள். சி.டி.ரவி தவறான நடத்தையில் இருந்த போதும், அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டு மகிமைப்படுத்தப்பட்டது. அவருக்கு மனசாட்சி இருந்தால், அவர் தனது குடும்பத்தில் உள்ள பெண்களிடம் குற்ற உணர்ச்சியில் இருப்பதாகச் சொல்ல வேண்டும்.
நான் போராடுவேன். இழிவான வார்த்தையை பயன்படுத்தி பெண் சமூகத்திற்கு அவமதித்ததற்காக அவர் தண்டிக்கப்படும் வரை இந்த லட்சுமி ஹெப்பால் இறுதிவரை போராடுவேன். ரவியின் வார்த்தைகளால் நான் வேதனைப்பட்டேன், ஆனால், இதுபோன்ற நூறு ரவிகளை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். சட்டசபையில் ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் வார்த்தையைப் பயன்படுத்திய நபரின், பின்னால் பா.ஜ.க நின்று அவரைப் பாராட்டுகிறார்கள். அவர்களின் முகமூடிகள் அகற்றப்பட வேண்டும்” என்று கூறினார்.