நடிகை கவுதமி மூலதன ஆதாய வரியில் 25%-யைச் செலுத்தும் பட்சத்தில், அவரது வங்கிக் கணக்குகளின் முடக்கத்தை நீக்கும்படி வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரித்துறையால் முடக்கப்பட்ட தனது வங்கிக் கணக்குகளை, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிடக்கோரி, நடிகை கவுதமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், ஸ்ரீபெரும்புதூர் அருகில் இருந்து விவசாய நிலத்தை ரூபாய் 4.1 கோடிக்கு விற்பனை செய்தேன். ஆனால் விற்கப்பட்ட நிலத்தில் கிடைத்த வருவாய் ரூபாய் 11.17 கோடி என தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையம் கூறியதைத் தொடர்ந்து, தனது ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி, நிலத்தை விற்றுக் கிடைத்தத் தொகைக்கான மூலதன ஆதாய வரியில் 25 சதவிகிதத்தை செலுத்தினால் வங்கிக் கணக்குகள் முடக்கத்தை வருமான வரித்துறையினர் நீக்கலாம் என்று தெரிவித்தார். மேலும், நடிகை கவுதமி மீதமுள்ள தொகையை நான்கு வாரங்களில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.