
இந்தியாவில் பாஜகவின் மத்திய அமைச்சராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில் பாஜக குழு தலைவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரிக்கப்படு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் இந்து சமூகத் தலைவராக இருக்கும் பாலேஷ் தன்கர்(43), பாஜகவின் அந்நாட்டுக் குழு ஒன்றையும் உருவாக்கி, அதனை நிர்வகித்தும் வருகிறார். மேலும் பாலேஷ் தன்கர் இந்து மத ஆணையத்தின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் பாலேஷ் தன்கர் மயக்க மருந்து கொடுத்துப் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலேஷ் தன்கர் போலியான வேலை வாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டு, அதன் மூலம் வேலை தேடி வரும் பெண்களுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அதனை ரகசிய கேமராக்களை கொண்டு வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். அப்படி வீடியோவாக பதிவு செய்யப்பட்டதைத் தனது கணினியில் எக்ஸ்சல் சீட்டில் பட்டியல் போட்டு அவர்களின் வயது, திறமை என தனித்தனியாக மதிப்பெண் கொடுத்து வந்துள்ளார். இதனை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலேஷ் தன்கர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிட்னியில் உள்ள பாலேஷ் தன்கருக்கு சொந்தமான அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அதில் மயக்க மருந்து மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு பயன்படுத்தபட்ட ரகசிய கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் போலி வேலை வாய்ப்பு விளம்பரங்களை பார்த்து வேலை தேடி வந்த 5 கொரிய பெணகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலேஷ் தன்கர் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் அனைவரும், வன்கொடுமை செய்யப்படும் போது, மயக்கத்தில் இருந்தனர் என்றும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே மேலும் 8 பாலியல் வழக்குகள் பாலேஷ் தன்கர் மீது சுமத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு 13 பாலியல் வழக்குகள் உள்பட 33 குற்ற வழக்குகளில் பாலேஷ் தன்கர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி டவுனிங் செண்டர் நீதிமன்றம் பாலேஷ் தன்கருகுக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததோடு, 30 ஆண்டுகளுக்கு பிணை வழங்கப்பாடாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.