Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கு: நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரிக்க தடை!; ஹைகோர்ட் உத்தரவு

Published on 07/03/2019 | Edited on 07/03/2019
gokulraj murder case

 

கோகுல்ராஜ் கொலை வழக்கை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து, உயர்நீதிமன்றம் புதன்கிழமை (மார்ச் 6) உத்தரவிட்டுள்ளது.

 

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் சித்ரா. இவருடைய மகன் கோகுல்ராஜ் (23). கடந்த 23.6.2015ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டித்து கொல்லப்பட்டுக் கிடந்தார்.

 

 

இவர் பி.இ., படித்து வந்தபோது, உடன் படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலிப்பதாக கருதிய கும்பல்தான் அவரை ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று அப்போது புகார்கள் எழுந்தன.

 

gokulraj murder case

 

இந்த வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை திருச்செங்கோடு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில், கடந்த 30.8.2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

 

 

இதற்கிடையே, அரசுத்தரப்பு வழக்கறிஞராக சேலத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் ஆஜராகி வந்த நிலையில், அவருக்கு பதிலாக பவானியைச் சேர்ந்த பா.மோகன் அரசுத்தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவருக்கும் நீதிபதிக்கும் விசாரணையின்போது அடிக்கடி கருத்துமோதல் ஏற்பட்டதால், இந்த வழக்கில் நீதிபதி ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், மேலும் யுவராஜ் தரப்பினர் அரசுத்தரப்பு சாட்சிகள் மிரட்டப்படுவதால் பிறழ் சாட்சியம் அளிப்பதாகவும், அதனால் இந்த வழக்கை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க தடை விதிக்கக்கோரியும், விசாரணையை சேலம் மாவட்ட நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு நீதிமன்றத்திற்கோ மாற்ற வேண்டும் என்றும் கோகுல்ராஜின் தாயார் சித்ரா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

 

இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் புதன்கிழமை (மார்ச் 6, 2019) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கோகுல்ராஜ் கொலை வழக்கை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக இரண்டு வாரங்களில் பதில் அளிக்குமாறு சிபிசிஐடிக்கும், குற்றம்சாட்டப்பட்டுள்ள யுவராஜ் உள்ளிட்ட 17 பேருக்கும் நோட்டீஸ் அளிக்கவும் உத்தரவிட்டார்.

 

 

இதனால் கோகுல்ராஜ் வழக்கு விசாரணை முடிய மேலும் காலதாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்