சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (77). முன்னாள் எம்.பி.,யான இவர் திமுக, அதிமுக, தேமுதிக என சில கட்சிகளுக்குச் சென்றுவிட்டு மீண்டும் அதிமுகவில் தஞ்சம் அடைந்தார். எனினும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 28- ஆம் தேதி, மேச்சேரி அருகே உள்ள தனது தோட்டத்திற்கு காரில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஓமலூர் சுங்கச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரிடம் வாகன ஆவணங்களைக் கேட்டனர். அதற்கு அவர் தான் ஒரு முன்னாள் எம்.பி., என்று கூற, அதற்கான அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜூனன் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர், இரும்பாலை காவல்நிலைய சிறப்பு எஸ்ஐ ரமேஷ் என்பவரை செருப்பு காலால் எட்டி உதைத்தார்.
பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை அடுத்து, அர்ஜூனன் மீது ஆபாசமாக பேசுதல், பொது ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பதிலுக்கு அவரும் காவல்துறையினர் மீது சேலம் மாநகர ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார்.
இதற்கிடையே, முன் ஜாமின் கேட்டு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அர்ஜூனன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு ஜூலை 6- இல் விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, முதல்வர் நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக்கூறி, அர்ஜூனனுக்கு இடைக்கால முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.