நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷாலுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார் ‘கங்காரு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிந்த சமயத்தில் இருந்தே விஷாலுக்கு எதிராக பல கேள்விகளை எழுப்பி வருபவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் சமூக வலைதளங்களிலும் விஷாலை நேரடியாக எதிர்த்து எழுதி வருபவர். இந்நிலையில், தான் தயாரித்து இயக்கி வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ‘மிக மிக அவசரம்’ திரைப்படத்தின் கதையை வெளியிட்டு விஷால் தரப்பு தன்னை வியாபாரா ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது என்றும், அதற்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் விஷால் தரப்பிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிருக்கிறார் சுரேஷ் காமாட்சி.
‘தயாரிப்பாளர் தேர்தலில் விஷால் தரப்பிற்கு எதிராக நின்றதனால் விஷாலும் அவரது ஆதரவாளர்களும் என்மேல் வன்மம் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பற்றிய பல தவறான தகவல்களை திரையுலகில் பரப்பி வருகின்றனர். சென்ற வருடம் நான் உட்பட 107 தயாரிப்பாளர்களின் பெயர்களை காப்பீட்டுத் திட்டத்திலிருந்து நீக்கினார்கள். அடுத்து நடைபெற்ற சங்க கூட்டத்தில் சங்கத்தின் பெயரில் வாங்கப்பட்ட 4 கோடி ரூபாய் கடனைப் பற்றி நான் கேள்வியெழுப்பியபோது சரிவர பதில் சொல்லாமல் வெளியேறினார்கள். வெளியேறும்போது விஷால் நேரடியாக என்னை திரையுலகத்திலிருந்து ஒழித்துக்கட்டுவேன் என்று சவால் விட்டார்.
சில வாரங்களுக்கு முன்பு நான் தயாரித்து இயக்கியிருக்கும் ‘மிக மிக அவசரம்’ படம் வெளியாவதைப் பற்றி அறிவித்திருந்தேன். அதிலிருந்து என்னைப் பற்றியும் எனது படத்தையும் தவறான நோக்கத்தில் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார்கள். மேலும் எனது படத்தின் கதையையும் வாட்சாப் க்ரூப்களில் வெளியிட்டு வருகிறார்கள். இது எனது படத்தின் வியாபாரத்தை பெரிதாக பாதித்துள்ளது.
மனதளவிலும் வியாபாரத்திலும் பெரும் பாதிப்பை எனக்கு ஏற்படுத்தியதற்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். இல்லையென்றால் தகுந்த சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‘ஏற்கனவே என் மேல் இருக்கும் கோபத்தால் பழிவாங்கும் நடவடிக்கையாக இதுபோன்ற விஷயங்களை செய்து வருகிறார்கள். ஒரு திரைப்படத்தின் கதையை வெளியாகும் முன்னே லீக் செய்வது அந்த படத்திற்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு தயாரிப்பாளருக்கு நன்கு தெரியும். தயாரிப்பாளராய் இருந்துகொண்டு, அதுவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்துகொண்டு விஷால் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. இது ஒரு குழந்தையை சிசுவிலேயே கொல்வதற்கு சமம்’ என்றார் வேதனையுடன்.
நடிகர் விஷால், விஷால் ஃப்லிம் ஃபேக்டரியின் மேனேஜர் ராஜசேகர் மற்றும் அனைத்திந்திய புரட்சித் தளபதி விஷால் நற்பணி இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஹரிஹரன் ஆகிய மூன்று பேருக்கு இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.