Skip to main content

தூங்குவதற்கு இடம்பிடிப்பதில் போட்டி; முதியவர் அடித்துக் கொலை

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

 former all india radio gardener for trichy incident

 

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்பப் பணி ஓய்வு பெற்றுள்ளார். அதன் பின்னர் தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில், அவரது மனைவி இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சிறிதுகாலம் திருமணமான தனது மகளின் வீட்டில் தங்கியிருந்தார்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளின் வீட்டில் இருந்து அவர் வெளியேறிய நிலையில், ஸ்ரீரங்கம் கிழக்கு சித்திரை வீதி பகுதியில்  உள்ள கோவில்களில் அன்னதானம் வாங்கிச் சாப்பிட்டு விட்டு அங்குள்ள கடை வராண்டாவில் படுத்துத் தூங்கி வந்தார். இங்கு வேறு சிலரும் இரவு நேரங்களில் படுத்துத் தூங்கி வந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது 39) என்பவர் கட்டட வேலைக்குச் சென்றுவிட்டு இதே பகுதியில் உள்ள கடை வராண்டாவில் படுத்துத் தூங்கி வந்தார்.

 

இந்நிலையில், நேற்று நள்ளிரவு கந்தசாமிக்கும் முருகேசனுக்கும் இடையே படுத்துத் தூங்க இடம்பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகேசன் அங்கு கிடந்த சிமெண்ட் கான்கிரீட் கல்லைத் தூக்கி கந்தசாமியின் தலையில் பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கந்தசாமி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கந்தசாமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தப்பி ஓடிய முருகேசனை கைது செய்தனர்.

 

கடை வராண்டாவில் இடம்பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்